கர்நாடகாவில் ஆட்சி அமைப்பது தொடர்பாக, ஆளுநரை நாளை சந்தித்து எடியூரப்பா உரிமை கோருகிறார். கர்நாடகாவில் மதசார்பற்ற ஜனதா தளம், காங்கிரஸ் கூட்டணி அரசு 14 மாதங்களாக ஆட்சி நடத்தி வந்த நிலையில், அமைச்சர் பதவி கிடைக்காததால் அதிருப்தியில் இருந்த எம்.எல்.ஏ.க்கள் 16 பேர் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். இதனால் குமாரசாமி அரசு பெரும்பான்மையை இழந்தது. இறுதி வரை எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளாததால், கர்நாடகாவில் கடந்த 12 நாட்களாக உச்சகட்ட அரசியல் குழப்பம் நிலவி வந்தது.
இதையடுத்து நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதற்காக கர்நாடக சட்டப்பேரவை கூடியது. கடந்த 4 நாட்களாக நம்பிக்கை வாக்கெடுப்பு மீதான மாரத்தான் விவாதம் நடைபெற்று வந்தது. இறுதியில் நேற்றிரவு நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பை 20 எம்.எல்.ஏ.க்கள் புறக்கணித்தனர்.
இதனால் சட்டப்பேரவைக்கு வந்திருந்த 205 எம்.எல்.ஏ.க்களில் பெரும்பான்மைக்கு 103 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவைபட்ட நிலையில், குமாரசாமி அரசுக்கு ஆதரவாக 99 பேரும், எதிராக 105 பேரும் வாக்களித்தனர். இதையடுத்து குமாரசாமி அரசு தோல்வி அடைந்து ஆட்சியை பறிகொடுத்ததால், அரசியல் குழப்பம் முடிவுக்கு வந்தது.
Discussion about this post