தனியார் பள்ளிகளை மிஞ்சும் வகையில் செயல்பட்டு வரும் அரசு பள்ளியின் சில மாணவ மாணவிகளை, மதுரையிலிருந்து சென்னைக்கு விமானத்தில் அழைத்துச் சென்று ஊக்கப்படுத்தியுள்ளது ஒரு தொண்டு நிறுவனம்.
மதுரை பொட்டப்பணையூரில் அமைந்துள்ள ஆரம்பப் பள்ளியில் தொடக்க காலத்தில் மாணவர்களின் எண்ணிக்கை வெகு குறைவாகவே இருந்தது. ஆசிரியர்களின் கடின உழைப்பாலும் பல்வேறு திறன்கள் வளர்ச்சியில் மாணவர்களுக்கு அவர்கள் கொடுத்த ஊக்கத்தாலும், தற்போது மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. பல்வேறு தனியார் தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் கட்டுமான பணிகளை மேற்கொண்டு, தற்போது, உயர்நிலைப் பள்ளியை போன்று காட்சியளிக்கிறது இந்த அரசு ஆரம்பப் பள்ளி. மேலும், தொண்டு நிறுவனங்கள் உதவியுடன் 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறைகளை துவக்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த பள்ளியானது தமிழக அரசின் சிறந்த பள்ளி விருதை பெற்றுள்ள நிலையில், சிறந்த தலைமை ஆசிரியருக்கான டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற்ற இந்த பள்ளியின் தலைமை ஆசிரியர், விருது தொகையை, தனது பள்ளி குழந்தைகளுக்கே வழங்கியுள்ளார்.
இவ்வாறு தனியார் பள்ளிகளுக்கும் முன் மாதிரியாக திகழும் இந்த பள்ளியின் மாணவர்களுக்கு மகிழ்ச்சியூட்டும் விதமாக அமைந்தது, சென்னைக்கான விமான பயணம்.
இப்பள்ளியில் நடைபெற்ற கல்வித் திறன் மேம்பாட்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, சிறப்பு பரிசு வழங்க வேண்டும் என்று தனியார் தொண்டு நிறுவனம் ஒன்று திட்டமிட்டது. அதன்படி, 9 மாணவ மாணவிகளை தேர்ந்தெடுத்து மதுரையிலிருந்து சென்னைக்கு விமானத்தில் அழைத்துச் சென்றது. சென்னை சென்றவர்கள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்த பிறகு பிர்லா கோளரங்கம் சென்று அறிவியல் சார்ந்த விஷயங்களை கண்டறிந்தனர். மீண்டும் மறுமார்க்கமாக சென்னையிலிருந்து மதுரைக்கு விமானத்தில் வந்தனர்.
விமானப்பயணம் என்பது சமூகத்தில் ஒரு சாரருக்கு இன்னும் எட்டாக கனியாக இருந்துவரும் நிலையில் விமானத்தில் பயணம் செய்யும் வாய்ப்பை அளித்து மாணவர்களையும் அவர்களின் பெற்றோர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ள தனியார் தொண்டு நிறுவனம் நிச்சயம் பாராட்டுக்குரியதே.
Discussion about this post