சென்னை மக்களின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், ரயில் மூலம் குடிநீர் கொண்டு வரும் திட்டம் இருப்பதாக உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள விவசாய நிலங்களில் இருந்து கிணறுகள் மூலம் தண்ணீர் சேகரிக்கப்பட்டு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்தநிலையில், குடிநீர் விநியோகம் செயல்பாடுகள் குறித்து திருவள்ளூரில் உள்ள மாகரல் குடிநீர் நீரேற்று நிலையத்தில், உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, சென்னை மக்களின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் உள்ளாட்சி துறை தீவிரமாக செயல்பட்டு வருவதாக கூறினார். குடிநீர் தேவை அதிகம் இருக்கும் பட்சத்தில், வெளி மாவட்டங்களில் இருந்து சரக்கு ரயில்கள் மூலம் தண்ணீர் கொண்டு வரும் திட்டம் பரிசீலனையில் இருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார். மாகரல் நீரேற்று நிலையத்தில் 60 எம்.எல்.டி. நீரில் இருந்து கூடுதலாக 8 எம்.எல்.டி தண்ணீர் சேகரிக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
Discussion about this post