ஜூன் 10 ஆம் தேதிக்கு பிறகு கர்நாடகாவில் காங்கிரஸ்-மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி ஆட்சி கவிழும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ரஞ்சன்னா தெரிவித்திருப்பது அம்மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் தும்குர் நகரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காங்கிரசின் படுதோல்விக்கு அக்கட்சியின் துணை முதலமைச்சர் பரமேஷ்வர் தான் காரணம் என குற்றம்சாட்டினார். இதனிடையே நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக பதவியேற்கும் வரை மட்டுமே பரமேஷ்வர் துணை முதலமைச்சராக தொடர முடியும் என கூறிய ரஞ்சன்னா, அதன் பிறகு பரமேஷ்வரால் அமைச்சராக கூட இருக்க முடியாது என்று தெரிவித்தார். ஜூன் 10 ஆம் தேதிக்கு பிறகு காங்கிரஸ்-மதச்சார்பற்ற ஜனதா தள கூட்டணி அரசு கவிழும் என்றும், அதுவரை அரசை கவிழ்க்காமல் பாஜக தலைவர்கள் தடுத்து வைத்திருப்பதாகவும் கூறினார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் ரஞ்சன்னாவின் இந்த பேச்சு கர்நாடகா அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியிருப்பதுடன், ஏற்கனவே தோல்வியால் துவண்டிருக்கும் காங்கிரஸ் மேலிடத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
Discussion about this post