காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டில் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் எனக்கூறி 11 கோடி ரூபாய் மதிப்புள்ள பணம் மற்றும் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட விவகாரத்தில் சென்னையை சேர்ந்த 8 பேரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.
மதுரையில் கடந்த 28ம் தேதி நடைபெற்ற நகை கண்காட்சியில் சென்னையை சேர்ந்த பிரபல தனியார் நகைக்கடை பங்கேற்றது. கண்காட்சி நிறைவுபெற்ற பின்பு, நகைக்கடையின் மேலாளர் தயாநிதி 12 கோடி ரூபாய் மதிப்புள்ள பணம் மற்றும் நகைகளை எடுத்துக்கொண்டு ஊழியர்களுடன் சென்னை நோக்கி புறப்பட்டார்.
அப்போது செங்கல்பட்டு சுங்கச்சாவடி அருகே தயாநிதி சென்ற காரை மறித்த மர்மநபர்கள், தாங்கள் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் எனக்கூறி அடையாள அட்டையைக் காட்டி காரை சோதனை செய்துள்ளனர். அப்போது காரில் இருந்த விலையுயர்ந்த நகைகளுக்கு உரிய ஆவணங்கள் இல்லை எனக்கூறி நகைகளை கைப்பற்றி மேலாளர் தயாநிதியையும் உடன் அழைத்துக்கொண்டு சென்றனர். சிறிது தூரம் சென்றவுடன் தயாநிதியை மிரட்டி கீழே இறக்கி விட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பாக செங்கல்பட்டு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தோஷ் ஹிதிமணி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் வழக்கு தொடர்பாக வியாசார்பாடியை சேர்ந்த மணிகண்டன், எண்ணூரை சேர்ந்த ரமேஷ், ராமசந்திரன் உள்ளிட்ட 8 பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். அவர்களிடம் இருந்து அதிகளவிலான நகை மற்றும் பணம் மீட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Discussion about this post