இலங்கையில் தேவாலயங்கள், நட்சத்திர ஓட்டல் உள்ளிட்ட 8 இடங்களில் நடைபெற்ற பயங்கர வெடிகுண்டு தாக்குதலில் 262 பேர் பலியாகியுள்ளனர்.
கொழும்பில் உள்ள புகழ் பெற்ற கொச்சிகடை அந்தோணியார் தேவாலயம், மட்டக்களப்பு கட்டுவாபிட்டியா தேவாலயம், நீர் கொழும்பில் உள்ள தேவாலயம், கிங்ஸ் பெர்ரி, சான் கிரில்லா, சின்னாமன் கிராண்ட் ஆகிய நட்சத்திர ஓட்டல்களில், ஈஸ்டர் பண்டிகையையொட்டி, கூட்டம் நிரம்பி வழிந்தது.
அப்போது அடுத்தடுத்து வெடித்த குண்டுகளால், பலர் உடல் சிதற தூக்கி எரியப்பட்டு, அந்த இடத்திலேயே உயிரிழந்தனர். 450க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த தாக்குதல்களில் பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து 262 ஆக உயர்ந்துள்ளது.
மோசமான தாக்குதலை கேட்டு தான் துயரமுற்றதாக போப் பிரான்சிஸ் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தேவாலயத்தின் மீது நடத்தப்பட்ட கொடூரமான கருணையற்ற தாக்குதல் என குறிப்பிட்டுள்ள அவர், பேரிழப்பை கண்டுள்ள இலங்கை மக்களை இறைவனிடம் ஒப்படைப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இதேபோல், வெடி குண்டு தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை அரசுக்கு உதவ தயாராக உள்ளதாக, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். இது குறித்த தனது டுவிட்டர் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ள அவர், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலை குறிப்பிட்டுள்ளார்.
Discussion about this post