மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கரூர், பெரம்பலூர் தொகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தீவிர வாக்கு சேகரிக்கிறார். கரூர் மக்களவைத் தொகுதி வேட்பாளர் தம்பிதுரையை ஆதரித்து விராலிமலை பகுதியில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வாக்குசேகரித்தார். அப்போது பேசிய அவர், காவிரி பிரச்சனையில் நீதிமன்றம் சென்று தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டியது மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா என்றார். காங்கிரசுடன் மத்தியில் நீண்ட காலம் கூட்டணியில் இருந்த திமுக, எந்தவொரு நலத்திட்டத்தையும் தமிழகத்திற்கு கொண்டு வரவில்லை என்று குற்றம்சாட்டினார்.
மணப்பாறையில் தம்பிதுரைக்கு ஆதரவாக வாக்கு சேகரித்த துணை முதலமைச்சர், திமுக ஆட்சியில் வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்டிருந்ததாக குறிப்பிட்டார். தற்போது அதிமுக ஆட்சியில் தமிழகம் அமைதிப் பூங்காவாக இருப்பதாக தெரிவித்தார்.
பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் என்.ஆர். சிவபதியை ஆதரித்து, குளித்தலையில் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், 1972ஆம் ஆண்டு, கர்நாடகாவில் அந்த மாநில அரசு அணைகளை கட்ட முயற்சித்தபோது, அதற்கு ஆட்சேபணை இல்லை என்று அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி தெரிவித்து விட்டதாக குற்றம் சாட்டினார்.
திருச்சி மாவட்டம் தொட்டியம் பகுதியில், பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் என்.ஆர். சிவபதிக்கு ஆதரவாக, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், மத்தியில் 10 ஆண்டு கால ஆட்சியில் பங்கு வகித்த திமுக, தமிழகத்திற்கு எந்த ஒரு உருப்படியான திட்டத்தையும் கொண்டு வரவில்லை என்றும், சேது சமுத்திரம் என்ற ஒரே திட்டம் மூலம், 40 ஆயிரம் கோடி ரூபாயை கடலில் கரைத்து விட்டதாகவும் சாடினார்.
Discussion about this post