மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தலையொட்டி நாடு முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் மேற்கொண்ட வாகன சோதனைகளில், 143 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மக்களவை தேர்தல் வரும் 11ம் தேதி முதல் 7 கட்டங்களில் நடைபெறவுள்ளதை முன்னிட்டு நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. இதையொட்டி, உரிய ஆவணங்கள் இன்றி பணம் உள்ளிட்டவற்றை கொண்டு செல்ல கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
மக்கள் கூடும் பகுதிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சுங்கச் சாவடிகள் அருகில் வாகன சோதனைகளை தேர்தல் பறக்கும் படையினர் இரவு பகலாக நடத்தி வருகின்றனர். இதில் பணம், நகைகள், மது வகைகள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்ட நாள் முதல் நேற்றுவரை நாடு முழுவதும் நடத்தப்பட்ட வாகன சோதனைகளில் 143 கோடியே 47 லட்சம் ரூபாய் கைப்பற்றப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. 89 கோடியே 64 லட்சம் மதிப்புள்ள மது வகைகள், 131 கோடியே 75 லட்சம் போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
162 கோடியே 93 லட்சம் மதிப்பிலான தங்கநகைகள், 12 கோடியே 20 லட்சம் மதிப்பிலான இலவசப் பொருட்கள் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
Discussion about this post