முல்லை பெரியாறு பகுதியில் வாகன நிறுத்தம் அமைப்பது குறித்த வழக்கில் இருந்து உச்ச நீதிமன்ற நீதிபதி கே.எம்.ஜோசப் விலகியுள்ளார்.
முல்லை பெரியாறு பகுதியில் வாகன நிறுத்தம் அமைக்கும் பணிகளில் கேரள அரசு ஈடுபட்டு வருகிறது. இதற்கு தமிழகத்தில் அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், வாகன நிறுத்தம் அமைக்கும் கேரள அரசின் முயற்சிக்கு தடை விதிக்கக்கோரி தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை, நீதிபதிகள் அசோக் பூசண், கே.எம்.ஜோசப் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது. இந்த நிலையில், வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, வாகன நிறுத்தம் தொடர்பான வழக்கில் இருந்து நீதிபதி ஜோசப் விலகியுள்ளார். கேரளாவை சேர்ந்தவர் என்பதால், தாம் இந்த வழக்கை விசாரிப்பது சரியாக இருக்காது என்று நீதிபதி ஜோசப் தெரிவித்துள்ளார். வழக்கில் இருந்து நீதிபதி ஜோசப் விலகியதையடுத்து, விசாரணை வரும் 26ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
Discussion about this post