விவசாயத்தை புறந்தள்ளி மாற்று வேலைகளை தேடிச்செல்லும் நிலையில், திண்டுக்கல்லை சேர்ந்த ஆசிரியை ஒருவர்,விவசாயத்தை காக்கும் விதமாக தன்னிடம் பயிலும் மாணவர்களுக்கு விவசாயம் குறித்து பயிற்சிகளை அளித்து வருகிறார். இதுகுறித்த செய்தித் தொகுப்பை காணலாம்…
கொஞ்சம் அதிகம் படித்த பலரும் விவசாயத்தை புறந்தள்ளும் நிலையில், விவசாயத்தை தேடி வெளி நாட்டு இளைஞர்கள் பலர் தமிழகத்தை நாடி வருகின்றனர். விவசாயத்தில் நமக்கு தெரியாத அருமை, பெருமையெல்லாம் அவர்களுக்குத்தான் புரிந்துள்ளதாகவே இது அர்த்தமாகியுள்ளது. இதை உணர்ந்த ஆசிரியை ஒருவர், விவசாயத்தின் தாக்கத்தை மாணவர்கள் மனதில் புகுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
வடமதுரை பகுதியைச் சேர்ந்தவர் ஆசிரியை புவனேஸ்வரி, அரசு உதவி பெறும் பள்ளியில் பணியாற்றி வரும் இவர், இத்தாலிய கணித முறை, ஜப்பானிய கணித முறைகளையும் பயிற்றுவிப்பதோடு விவசாயத்தின் பெருமைகளை உணர்த்தும் வகையில் தன்னிடம் பயிலும் மாணவர்களுக்கு, நம் மண் சார்ந்த சிறப்புகளையும் எடுத்து கூறி வருகிறார்.
மரம் வளர்ப்பிற்கு உதவும் விதைப்பந்து தயாரித்தல், மண் இல்லா தீவன வளர்ப்பு, ஹைட்ரோ போனிக்ஸ் முறை விவசாயம் போன்ற பயிற்சிகளையும் புவனேஸ்வரி அளித்து வருகிறார்.
உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் என்ற வள்ளுவரின் வரிகளுக்கு ஏற்ப, தன்னிடம் பயிலும் மாணவர்களுக்கு விவசாயம் குறித்த பயிற்சிகளை அளித்து வரும் ஆசிரியை புவனேஸ்வரி, உலகிற்கே உணவளிக்கும் விவசாயத்திற்காக வாரத்தில் ஒரு நாள் சிறிது நேரம் ஒதுக்கி மாணவர்களுக்கு கற்பித்து வருகிறார்.
மேலும், பிளாஸ்டிக் ஒழிப்பை வரவேற்றுள்ள புவனேஸ்வரி, பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக இயற்கை சார்ந்த பொருட்களை பயன்படுத்த பொதுமக்களுக்கு ஊக்கமளித்ததற்காக பசுமை தேசிய விருதையும் பெற்றுள்ளார். எதிர்காலத்தில் விவசாய அதிகாரிகளாகவும், விவசாயிகளாகவும் மாணவர்கள் கொண்டாடப்பட வேண்டும் என்பதே தனது லட்சியம் எனவும் ஆசிரியை புவனேஸ்வரி தெரிவித்துள்ளார்.
Discussion about this post