அயோத்தி விவகாரத்தில் நடுநிலையாளர்களை அமைத்து பேச்சுவார்த்தை நடத்தும் குழு அமைக்கும் விவகாரம் தொடர்பான வழக்கின் தீர்ப்பினை உச்சநீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது. உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமஜென்ம பூமி, பாபர் மசூதி தொடர்பான வழக்கில் சர்ச்சைக்குரிய நிலத்தை சம்பந்தப்பட்ட 3 அமைப்புகள் சரிசமமாக பிரித்துக் கொள்ள அலகாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையெதிர்த்து உச்சநீதிமன்றத்தில் 14 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்கள் மீதான விசாரணையை கடந்த 26ம் தேதி மேற்கொண்ட, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு, மத்தியஸ்தம் மூலம் இந்த பிரச்சினையை தீர்க்கலாம் என யோசனை தெரிவித்தது. இந்த யோசனையை சில முஸ்லிம் அமைப்புகள் ஏற்றுக் கொண்ட நிலையில், ராம் லல்லா உள்ளிட்ட இந்து அமைப்புகள் ஏற்க மறுத்தன.
இந்நிலையில், இந்த வழக்கில், அனைத்து தரப்பு வாதங்களையும் இன்று பதிவு செய்த நீதிபதிகள், நடுநிலையாளர்கள் அமைத்து பேச்சுவார்த்தை நடத்தும் விவகாரத்தில் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தனர்.
இந்த விவகாரத்தில் கடந்தகால நிகழ்வுகள் குறித்து எதுவும் செய்ய இயலாது என்று தெரிவித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், தற்போது மற்றும் எதிர்காலத்தில் என்ன தேவையோ அதைத்தான் செய்ய இயலும் என்று தெரிவித்தனர்.
Discussion about this post