வங்கி கணக்கு மற்றும் செல்போன் இணைப்பு பெறுவதற்கு ஆதார் எண்ணை விருப்பத்தின் பேரில் இணைக்கும் அவசர சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.
வங்கி கணக்கு மற்றும் செல்போன் இணைப்பு பெறுவதற்கும், அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை பெறுவதற்கும் ஆதார் எண் கட்டாயம் என மத்திய அரசு அறிவித்தது. இதனை எதிர்த்து தொடுக்கப்பட்ட வழக்கில் அரசின் திட்டங்களை தவிர்த்து பிற சேவைகளுக்கு ஆதாரை கட்டாயப்படுத்தக் கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து வங்கி கணக்கு மற்றும் செல்போன் இணைப்பு பெறும்போது விருப்பத்தின் பேரில் ஆதார் எண்ணை இணைக்கும் வகையில் சட்ட திருத்தம் செய்ய மத்திய அரசு முடிவு செய்தது. சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் அதற்கான அவசர சட்டத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டது. இந்நிலையில், ஆதார் எண்ணை விருப்பத்தின் பேரில் இணைக்கலாம் என்ற அவசர சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். இதன்மூலம் ஆதார் விவரங்களை தனியார் நிறுவனங்கள் தவறாக பயன்படுத்தினால் ஒரு கோடி ரூபாய் வரை அபராதம் விதிக்கவும் அவசர சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
Discussion about this post