கன்னியாகுமரியில் 40 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் பல்வேறு நலத்திட்டங்களை பிரதமர் மோடி இன்று துவக்கி வைக்கிறார்.
அகஸ்தீஸ்வரத்தில் உள்ள தனியார் கல்லூரி மைதானத்தில் நடைபெற உள்ள விழாவில் கலந்து கொள்வதற்காக கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் பிரதமர் மோடி இன்று பிற்பகலில் வர உள்ளார். நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் அவர், 40 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு நலத்திட்டங்களை துவக்கி வைக்கிறார்.
பாம்பனில் 250 கோடி ரூபாய் மதிப்பில் புதிய பாலத்தை துவக்கி வைக்கிறார். தொடர்ந்து ராமேஸ்வரம் – தனுஷ்கோடி இடையே 208 கோடி ரூபாயில் புதிய ரயில் பாதையை துவக்கி வைக்கும் பிரதமர் மோடி, மதுரை – சென்னை எழும்பூர் இடையிலான தேஜஸ் ரயில் சேவையையும் துவக்கி வைக்கிறார்.
மதுரை- செட்டிகுளம், செட்டிகுளம்- நத்தம் நான்குவழிச் சாலைத் திட்டம், குமரியில் சாலைப் பாதுகாப்புப் பூங்கா மற்றும் போக்குவரத்து அருங்காட்சியகத் திட்டம் ஆகியவற்றையும் துவக்கி வைக்கிறார். மேலும் மதுரை- ராமநாதபுரம் நான்குவழிச் சாலை, குமரி மாவட்டம், மார்த்தாண்டம், பார்வதிபுரம் மேம்பாலங்கள், பணகுடி- கன்னியாகுமரி நான்குவழிச் சாலை ஆகியவற்றையும் பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.
நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மத்திய நிதி மற்றும் கப்பல் போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், எம்.பி.க்கள் கோபாலகிருஷ்ணன், செந்தில்நாதன், விஜயகுமார், அன்வர்ராஜா உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
அரசு நிகழ்ச்சியில் மட்டுமே பிரதமர் மோடி கலந்து கொள்ளவுள்ளதாகவும், கட்சி நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post