காட்டின் சுதந்திரமான வாழ்க்கைக்கே வனவிலங்குகள் அதிகமாக பிரியப்படும் என்ற கோட்பாட்டை பொய்யாக்கியுள்ளது சின்னத்தம்பி யானை. வனப் பகுதிகளுக்குள் கொண்டு சென்று விட்டாலும், எத்தனை கிலோ மீட்டர் தொலைவானாலும் கடந்து மீண்டும் குடியிருப்புப் பகுதிக்கே ஓடிவந்து விடுகிறது சின்னத்தம்பி…
சுவைக்கு மனிதர்கள் அடிமையாவது இயல்பு. இதுவே ஒரு யானைக்கு நடந்தால், அதுதான் காட்டுயானை சின்னத்தம்பி விஷயத்திலும் நடந்துள்ளது.அடிக்கடி வனப்பகுதியிலிருந்து குடியிருப்புப்பகுதிகளுக்கு வரும் சின்னத்தம்பி யானை அங்கு, விளைநிலங்களில் இருக்கும், கரும்பு, வாழைப்பயிர்களில் தனக்கு தேவையான அளவிற்கு சாப்பிட்டு விட்டு செல்லுமாம். ஆனால் தன்னை வம்பிழுக்காத மனிதர்களுக்கு அது எந்த தீங்கையும் செய்யாது என்கின்றனர் வனத்துறையினர் மற்றும் பொதுமக்கள்.
ஜனவரி 25ம் தேதி கோவை தடாகம் பகுதியில் உள்ள சோமையனூர் பகுதியில் விளைநிலங்களை சேதப்படுத்திய சின்னத்தம்பிக்கு மயக்கஊசி போட்டு, கும்கி யானை கலீம் உதவியுடன் ஜேசிபி வாகனம் மூலம் ஏற்றி 80 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள டாப்ஸ்லிப்பின் வரகளியாறு வனப்பகுதியில் விட்டு வந்தனர் வனத்துறையினர்.
சின்னத்தம்பிக்கு ரேடியோ காலர் பொருத்தப்பட்டு அதன் அசைவுகள் கண்காணிக்கப்பட்டன. ஆனால் சில தினங்கள் கழித்து மீண்டும் டாப்ஸ்லிப்பிலிருந்து 40 கிலோ மீட்டர் பயணம் செய்து, புளியம்கண்டி வழியாக கோட்டூர் குடியிருப்புப்பகுதிக்கு வந்தது சின்னத்தம்பி. அங்கிருந்து அங்கலகுறிச்சி, ஜேஜே.நகர் வழியாக கோபால்சாமி கரடில் முகாமிட்டது.
அன்றிரவு விவசாயி ஒருவருக்கு சொந்தமான வாழை மரங்களை சேதப்படுத்தி, அங்கிருந்த தீவனத்தையும் ருசி பார்த்தது.இதையடுத்து கோவையின் அரசூர், தேவனூர்புதூர், தீபாளப்பட்டியில் சுற்றித்திரிந்தது. யானையை திருமூர்த்திமலைக்கு விரட்ட வனத்துறையினர் மேற்கொண்ட முயற்சிக்கு எந்த பலனும் கிடைக்கவில்லை.
இதையடுத்து மருள்பட்டிக்கு வந்த சின்னத்தம்பி, அங்கிருந்து 15 கிலோ மீட்டர் பயணம் செய்து அடர்ந்த முள்காடு உள்ள மைவாடிக்கு சென்றது. வரும்வழியில் வாழை, கரும்பு உள்ளிட்டவற்றை சுவைத்த யானை, அங்கிருந்த தொட்டியில் இருந்த தண்ணீரையும் குடித்துள்ளது. தற்பொழுது மைவாடியிலேயே முகாமிட்டுள்ளது சின்னத்தம்பி.
கும்கி யானை கலீம் உதவியுடன் சின்னத்தம்பி யானையை வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் முயற்சித்த போதும், கலீமை தனது நண்பராக மாற்றிக் கொண்ட சின்னத்தம்பி, அதனுடன் சேர்ந்து உணவுகளை சுவைத்த பின்னர், மீண்டும் மைவாடி அடர்ந்த வனப்பகுதிக்குள் முகாமிட்டுள்ளது. அதை அதன் போக்கிலேயே வனப்பகுதிக்குள் விரட்ட, 80க்கும் மேற்பட்ட வனத்துறையினரும் காத்துள்ளனர். இந்நிலையில் சின்னத்தம்பியை விரட்ட மாரியப்பன் என்ற மற்றுமொரு கும்கி யானையை வனத்துறையினர் வரவழைத்துள்ளனர்.
Discussion about this post