நாடாளுமன்றத்தில் அமைச்சர் பியூஷ் கோயல் தாக்கல் செய்த மத்திய இடைக்கால பட்ஜெட்டில் இடம்பெற்ற சிறப்பம்சங்கள் குறித்து தற்போது காணலாம்……
நாட்டின் பெருமிதத்தை கட்டிக்காக்கும் வகையில், தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது என பியூஷ் கோயல் கூறினார்.
2022 ஆம் ஆண்டுக்குள் புதிய இந்தியாவை உருவாக்க பாடுபடுவோம் என்றும் இந்தியா வெகு வேகமாக வளரும் பொருளாதாரமாக முன்னேறியுள்ளது எனவும் கூறிய அவர், விவசாயிகளின் வருமானம் 2022 ஆம் ஆண்டுக்குள் இரட்டிப்பாகும் என்றும் உலகத்திலேயே 6 ஆவது பெரும் பொருளாதாரமாக இந்தியா முன்னேறியுள்ளது எனவும் தெரிவித்தார்.
கொள்கை அளவில் ஏற்படக்கூடிய முடக்கங்களை நீக்கும் வகையில் இந்த அரசு பாடுபடுவதாக குறிப்பிட்ட அவர், பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு பெரும் வெற்றி பெற்றுள்ளதாகவும், நடப்பு கணக்கு பற்றாக்குறை இந்த ஆண்டில் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.5 சதவீதமாக குறையும் என்றார்.
பணவீக்கம் பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டதால் இந்திய குடும்பங்கள் 30 முதல் 40 சதவீதம் வரை செலவுகளை குறைக்க முடிந்தது என்றும் மாநிலங்களுக்கான நிதி ஒதுக்கீடு 32 சதவீதத்திலிருந்து 42 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது எனவும் கூறிய மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நிதிப் பற்றாக்குறை 3.4 சதவீதமாக குறைந்துள்ளது என குறிப்பிட்டார்.
பணவீக்கம் கட்டுப்படுத்தப்பட்டு உயர் வளர்ச்சிவீதம் எட்டப்பட்டுள்ளது என்றும் கடந்த ஐந்தாண்டுகளில் அந்நிய நேரடி முதலீடு 239 பில்லியன் டாலர் அளவுக்கு உயர்ந்துள்ளதாகவும் தெரிவித்தார். சரக்கு மற்றும் சேவை வரி இந்த அரசின் மிகப்பெரும் வரி சீர்திருத்தம் என்றும் அப்போது, வங்கித் துறையில் நேர்மறையான நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டதாக தெரிவித்த அவர் திவால் மற்றும் நொடித்து போதல் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதன் காரணமாக, வாராக்கடன் குறைந்துள்ளது என்றார்.
ஊரக துப்புரவு நிலை 98 சதவீதமாக அதிகரித்துள்ளது எனக்கூறிய அமைச்சர், நிலக்கரி மற்றும் ஸ்பெக்ட்ரம் ஏலம் வெளிப்படையாக நடத்தப்பட்டது என்றும் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு வெளிப்படையான சகாப்தத்திற்கு வித்திட்டுள்ளது எனவும் கூறினார். ஊழலற்ற ஆட்சியை தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அளித்து வருகிறது என்றும்,
இந்தியாவில் திறந்தவெளி கழிப்பிடங்கள் அற்ற 5.45 லட்சம் கிராமங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
ஊரக நகர்ப்புற இடைவெளியை இந்த அரசு வெகுவாக குறைத்துள்ளது என குறிப்பிட்ட மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்திற்கு இந்த அரசு 60 ஆயிரம் கோடி ரூபாய் வழங்கியது என்றார். கிராம சாலைத் திட்டம் மும்மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர், பிரதமர் கிராம சாலைத் திட்டத்தின்கீழ் 2019-20 ஆம் ஆண்டுக்கு 19 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது எனவும் கூறினார்.
நகர்ப்புறங்களில் உள்ள வசதிகள், கிராமத்தினருக்கும் கிடைக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு உள்ளதாகவும், 143 கோடி எல்ஈடி விளக்குகள் விநியோகிக்கப்பட்டுள்ளது என்றும், எல்ஈடி விளக்குகள் பயன்பாட்டினால் ஆண்டுதோறும் 50 ஆயிரம் கோடி ரூபாய் மிச்சப்படுத்தப்பட்டுள்ளது எனவும் கூறினார்
உலகின் மிகப்பெரும் சுகாதார காப்பீடு திட்டமாக ஆயுஷ்மான் பாரத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது என்றும், சவுபாக்யா திட்டத்தின்கீழ் ஒவ்வொரு வீட்டிற்கும் இலவச மின்சாரம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என்ற அவர், மார்ச் 2019-க்குள் நாட்டில் உள்ள அனைத்து வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கப்படும் என கூறினார்.
நாடு முழுவதும் 21 எய்ம்ஸ் மருத்துவமனைகள் உருவாக்க நிலையிலோ அல்லது செயல்பாட்டு நிலையிலோ உள்ளதாக கூறிய அவர் தேர்ந்தெடுக்கப்பட்ட 115 மாவட்டங்களில் திட்டமிட்ட வளர்ச்சி ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றார்.
22 ஆவது எய்ம்ஸ் மருத்துவமனை ஹரியானாவில் அமைக்கப்படவுள்ளது என்று கூறிய அவர், 22 வேளாண் விளை பொருட்களுக்கு அதன் உற்பத்தி செலவை விட 50 சதவீதம் கூடுதலாக குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
பிரதமரின் பொது சுகாதார காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் 10 லட்சம் நோயாளிகள் பயனடைந்துள்ளதாகவும், ஏழை விவசாயிகளுக்கு உதவும் வகையில் பிரதமரின் விவசாயிகள் சம்மான் நிதித் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது எனவும் 2 ஹெக்டேர் வரை நிலம் வைத்துள்ள விவசாயிகள் இந்த திட்டத்தின் கீழ் பயனடையலாம் என்றும் கூறினார்.
இந்தத் திட்டத்தின்கீழ் ஆண்டுக்கு ஏழை விவசாயிகளுக்கு ஆண்டு ஒன்றுக்கு ஆறாயிரம் ரூபாய் நேரடி மானிய வங்கிப் பரிமாற்ற அடிப்படையில் வழங்கப்படும் என்றும், அறுவடைக்கு முந்தைய காலக் கட்டத்தில் இந்த திட்டம் விவசாயிகளுக்கு தேவைப்படும் நிதியுதவியை வழங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதாகவும், இந்த திட்டத்திற்காக 75 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றார்.
மீனவர்கள் நலன்காக்க தனித்துறை அமைக்கப்படும் என்றும், பசுப்பாதுகாப்புக்கு தேசிய காமதேனு திட்டம் செயல்படுத்தப்படும் எனவும் கூறினார். கால்நடை வளர்ப்பு மற்றும் மீன்வளர்ப்புத் துறையில் கடன்களை உரிய காலத்தில் திருப்பி செலுத்துவோருக்கு 3 சதவீத வட்டி சலுகை வழங்கப்படும் என்றும், தேசிய பேரிடரால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அவர்கள் வாங்கிய வேளாண் கடனில் 2 சதவீத வட்டித் தள்ளுபடி வழங்கப்படும் எனவும் குறிப்பிட்டார்.
புதிய ஓய்வூதியத் திட்டத்தின்கீழ் ஊழியர்களின் பங்களிப்பு நான்கு சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது என்றும், வயதானவர்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது எனவும் கூறிய அவர், ஷிரம் யோகி என்ற பெயரிலான திட்டத்தின்கீழ் முதியோருக்கு ஓய்வூதியம் அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.
மாதம் 21 ஆயிரம் வரை ஊதியம் பெறுவோருக்கும் அரசு ஈட்டுதவித் திட்டத்தின்கீழ் பயன் பெறலாம் என்றும், வருங்கால வைப்பு நிதி சந்தாதாரர்கள் உயிரிழக்க நேரிட்டால் ஆறு லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் எனவும், அங்கன்வாடி மற்றும் ஆஷா திட்டத்தின்கீழ் பணிபுரிவோருக்கான மதிப்பூதியம் 50 சதவீத அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளது என கூறினார்.
தொழிலாளர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் குறைந்த பட்ச ஓய்வூதியம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது என்றும், ஷிரம் யோகி திட்டத்திற்கு 500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என கூறிய அவர், இந்த திட்டத்தின் கீழ் மாதம் மூவாயிரம் ரூபாய் ஓய்வூதியமாக வழங்கப்படும் என்றார்.
உஜ்வாலா திட்டத்தின்கீழ் ஆறுகோடி சமையல் எரிவாயு இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது என்றும் புதிதாக தொழில் தொடங்கும் நாடுகளில் உலக நாடுகளின் பட்டியலில் இரண்டாவது இடத்தை இந்தியா பிடித்துள்ளது எனக் கூறிய அமைச்சர் பியூஷ் கோயல், முத்ரா திட்டத்தின்கீழ் பயன் பெற்றவர்களில் 70 சதவீதம் பேர் மகளிர்கள் தான் என்றார்.
திறன் மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் ஒரு கோடி இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். மகப்பேறு திட்டத்தின்கீழ் கர்ப்பிணி பெண்களுக்கு நிதியுதவி வழங்க உள்ளதாகவும், உள்நாட்டு வர்த்தகம், சேவைகளுக்கு முன்னுரிமை அளிக்க மத்திய அரசு தீவிர முயற்சி மேற்கொண்டு வருவதாகவும் பியூஷ்கோயல் தெரிவித்தார். முத்ரா திட்டத்தின்கீழ் 7.23 லட்சம் கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது என்றார்.
ராணுவ சேவையில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு கணிசமான ஊதிய உயர்வு, சிறு-குறு தொழில் நிறுவனங்களில் இருந்து அரசின் கொள்முதல் 25 சதவிகிதம் உள்ளதாகவும், இதில் மகளிர் நடத்தும் நிறுவனங்களில் இருந்து 3 சதவிகித அளவுக்கு கொள்முதல் செய்யப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
ராணுவத்திற்கு, 3 லட்சம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் கூறினார். உலகிலேயே அதிவேகமாக நெடுஞ்சாலைகளை அமைக்கும் நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது என்றும் நாள் ஒன்றுக்கு 27 கிலோ மீட்டர் தூரத்திற்கு நெடுஞ்சாலைகள் அமைக்கப்படுவதாகவும் கூறினார்.
உள்நாட்டில் நீர்வழிப் பாதையில் சரக்கு பெட்டக போக்குவரத்து முதன்முறையாக தொடங்கப்பட்டது என்ற அவர், உடான் திட்டத்தின்கீழ் சாமானியரும் விமானப்பயணம் மேற்கொள்ள முடிவதாக நிதியமைச்சர் பியூஷ்கோயல் பெருமிதம் தெரிவித்த அவர், சூரிய சக்தி மின்சார உற்பத்தி 10 மடங்காக அதிகரித்துள்ளது என்றார்.
பெரம்பூர் ஐ சி எப் தொழிற்சாலையில் வடிவமைக்கப்பட்ட அதிவிரைவு ரயில் வந்தே பாரத் என்று பெயரிடப்பட்டு தில்லிக்கும் – வாரணாசிக்கும் இடையே இயக்கப்படும் என்றும் ரயில்வே துறைக்கு மூலதன ஆதரவாக சுமார் 65 ஆயிரம் கோடி ரூபாய் வழங்க திட்டம் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அடுத்த ஐந்தாண்டுகளில் ஒரு லட்சம் கிராமங்களை டிஜிட்டல் கிராமங்களாக மாற்ற திட்டம் உள்ளது என்று கூறிய அவர், முதன்முறையாக மேகாலயா, மிசோரம், திரிபுரா ஆகிய பகுதிகளுக்கு ரயில் இணைப்பு ஏற்படுத்தப்படும் என்றார். அருணாச்சலப்பிரதேசத்தில் விமானப் போக்குவரத்து அறிமுகம் செய்ய உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மொபைல் இணைப்பில் இணைய வசதியை அதிகளவில் பயன்படுத்தும் நாடுகளில் முதல் இடத்தை இந்தியா பிடித்துள்ளதாகவும் கூறினார். வடகிழக்கு மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு, 21 சதவிகிதம் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் 34 கோடி ஜன்தன் வங்கி கணக்குகள் தொடக்கப்பட்டுள்ளது என்றார்.
2013 – 14 ஆம் ஆண்டோடு ஒப்பிடுகையில் வரி வருவாய் 12 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாகவும், வரி செலுத்துவோர் எண்ணிக்கை 80 சதவீதமாக உயர்ந்துள்ளதாகவும் கூறினார். நடுத்தர வர்க்க மக்கள் மீதான வரிச்சுமையை குறைக்க அரசு முடிவெடுத்தது வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
50 ஆயிரம் கோடி ரூபாய் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாகவும், கறுப்புப் பணத்திற்கான நடவடிக்கைகளும், பண மதிப்பிழப்பு நடவடிக்கையும் கணக்கில் காட்டப்படாத ஒரு லட்சத்து 30 ஆயிரம் கோடி ரூபாய் உதவியதாகவும் அவர் தெரிவித்தார்.
3 லட்சத்து 38 ஆயிரம் ரூபாய் போலி நிறுவனங்கள் கண்டறியப்பட்டு, அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறிய அவர், இந்திய பொருளாதாரம் 5 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிற்கு உயரும் என்றார். அடுத்த 13 ஆண்டுகளில் இந்திய பொருளாதாரம் 10 லட்சம் கோடி ரூபாய் மதிப்புடையதாக மாறும் என்றும் கூறினார்.
2030 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் ஏற்படக்கூடிய 10 முக்கிய முன்னேற்றங்கள் குறித்து பேசிய நிதியமைச்சர் முதலாவதாக சமூக மற்றும் அடிப்படை கட்டமைப்புகள் நிறுவப்படும் என்றார். இரண்டாம் நிலையில் டிஜிட்டல் இந்தியாவை கட்டமைப்பது, மூன்றாம் நிலையில் மாசற்ற இந்தியாவை உருவாக்குவது குறித்து பேசினார்.
நான்காம் நிலையில் ஊரக தொழில் கட்டமைப்பை விரிவாக்குவது, ஐந்தாம் நிலையில் ஆறுகளை சுத்தப்படுத்தி தூய்மையான குடிநீரை வழங்குவது, ஆறாம் நிலையில் கடலோரப் பகுதிகளையும், கடல் நீரையும் வளர்ச்சிக்கு பயன்படுத்த உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
ஏழாம் நிலையில் 2022 ஆம் ஆண்டுக்குள் விண்வெளிக்கு மனிதனை அனுப்புவது, எட்டாம் நிலையில் உணவு உற்பத்தியில் இந்தியா தன்னிறைவை எட்டுவது, ஒன்பதாம் நிலையில் சுகாதாரமான வலிமையான இந்தியாவை உருவாக்குவது, பத்தாம் நிலையில் குறைந்தபட்ச ஆளுமை, அதிகபட்ச நிர்வாகத் திறன் உருவாக்குவதாகவும் அவர் கூறினார்.
நடப்பு ஆண்டில் அரசு பங்குகளை 80,000 கோடி ரூபாய் அளவுக்கு விற்க முடிவு செய்துள்ளதாகவும், ஆதிதிராவிடர் நலத் திட்டத்திற்கு 76 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், பழங்குடியினருக்கு 40 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
தேசிய கல்வித் திட்டத்திற்கு 38 ஆயிரத்து 500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும்,
ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுத் திட்டத்திற்கு 27 ஆயிரத்து 500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
தனிநபர் வருமான வரி உச்சவரம்பு ஐந்து லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது என்றும் ஆண்டுக்கு ஐந்து லட்சம் ரூபாய் வரை வருமானம் ஈட்டுவோருக்கு இனி முழு வரி விலக்கு அளிக்கப்படுவதாகவும் அவர் கூறினார். மத்திய அரசின் இந்த அறிவிப்பால் மூன்று கோடி நடுத்தர வர்க்கத்தினர் பயன்பெறுவார்கள் என்றார்.
கூடுதலாக ஏற்கனவே 40,000 ரூபாயாக இருந்த நிரந்தர கழிவு 50,000 ரூபாயாக அதிகரிக்கப்படுவதாகவும் அவர் கூறினார். தன்வசம் உள்ள இரண்டாவது வீட்டை வாடகைக்கு விடும்போது அதற்கு விதிக்கப்படும் வருமான வரி உச்சவரம்பு 1,80,000 ரூபாயில் இருந்து 2,40,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
அதாவது வாடகை மூலமான வருமானம் மாதம் 20,000 ரூபாய் வரை இருக்கும்போது வருமான வரி கிடையாது என்றும், வங்கிகளிலோ, அஞ்சலகங்களிலோ டெபாசிட் செய்யப்படும் தொகைக்கான வரி கழிவு உச்சவரம்பு 40,000 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது நிதியமைச்சர் பியூஷ்கோயல் தெரிவித்தார்.
Discussion about this post