டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பல்வேறு துறைகளில் வீரதீர செயல்களில் ஈடுபட்ட 26 குழந்தைகளுக்கு குடியரசு தலைவர் விருதுகளை வழங்கினார். இந்திய குழந்தைகள் நலத்துறையால் வழங்கப்பட்டு வந்த தேசிய குழந்தைகள் விருது, டெல்லி உயர்நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்படி இந்த ஆண்டு முதல் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் வளர்ச்சித்துறையால் வழங்கப்படுகிறது.
சமூகவியல், உளவியல், அறிவியல், இசை, விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் கடந்த ஆண்டு சாதனை புரிந்த 26 சிறுவர் சிறுமியர் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கு வீரதீர விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. 900 விண்ணப்பங்களில் இருந்து இவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இவர்களுக்கான விருதுகளை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், குடியரசு மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அளித்தார். நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் மேனகா காந்தியும் பங்கேற்றார்.
விருது பெற்ற சிறுவர் சிறுமிகளுக்கு ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலை, விருது, 10 ஆயிரம் ரூபாய்க்கான புத்தக கூப்பன்கள், சான்றிதழ்கள் உள்ளிட்டவை அளிக்கப்பட்டன. இவர்கள், குடியரசு தின விழா அணிவகுப்பிலும் கலந்து கொள்ளவுள்ளனர்.
இந்த 26 பேர்களில், டெல்லியை சேர்ந்த 6 வயதான ஈஷா தீக்சித்தும் ஒருவர். மிகவும் இளம் வயதான இந்த சிறுமி இதுவரை 500 கன்றுகளை நட்டு, சூழலியலுக்கு சாதகமான நடைமுறையை மேற்கொண்டுள்ளதற்காக இந்த விருது அளிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post