தமிழகத்தின் உரிமைக்காகவே அ.தி.மு.க. எம்.பி.க்கள் அவையில் முழக்கமிட்டதாக விளக்கம் அளித்த மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, அவர்கள் மீதான நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும் என்று சபாநாயகருக்கு கோரிக்கை வைத்தார்.
மேகேதாட்டு விவகாரம் தொடர்பாக மக்களவையில் முழக்கமிட்ட அ.தி.மு.க. எம்.பி.க்கள், பி வேணுகோபால், ஏ.டி.என் ராமசந்திரன், கேகே.கோபல் ஆகியோர் அவையில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதேபோல் ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கோரிய தெலுங்கு தேசம் எம்.பி. சிவபிரசாத்தும் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். தமிழகத்தின் உரிமைக்காக முழக்கமிட்ட அ.தி.மு.க. எம்.பி.க்கள் 34 பேர் இதுவரை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
இது குறித்து கேள்வி நேரத்தின்போது பேசிய, மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக மேகேதாட்டுவில் அணை கட்ட, கர்நாடக அரசுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியதால் அ.தி.மு.க. எம்.பி.க்கள் அவையில் முழக்கமிட்டதாக விளக்கமளித்தார். தமிழகம் பாதிக்கப்படும் என்பதாலேயே எம்.பி.க்கள் தங்கள் உணர்வை வெளிப்படுத்தியதாக குறிப்பிட்ட அவர், எனவே, அவர்கள் மீதான சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
Discussion about this post