சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டம் எவ்வித அசம்பாவிதமும் இன்றி நடைபெற 15,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
இது தொடர்பாக சென்னை மாநகர காவல் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 31ம் தேதி இரவு 9 மணியில் இருந்து மயிலாப்பூர், கீழ்பாக்கம், திருவல்லிக்கேணி, தியாகராய நகர், உள்ளிட்ட நகரின் முக்கிய பகுதிகளில், 368 இடங்களில் வாகன தணிக்கை குழுக்கள் வாகன தணிக்கை செய்வார்கள் என கூறப்பட்டுள்ளது. மேலும் 25 சாலை பாதுகாப்பு குழுக்கள் நகர் முழுவதும் இரு சக்கர வாகனங்களில் ரோந்து சென்று பாதுகாப்பாக இருப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவார்கள். கிண்டி, அடையாறு உள்ளிட்ட இடங்களில் 20 பைக் ரேஸ் தடுப்பு குழுக்கள் பணியில் ஈடுபடுவார்கள். சென்னையில் உள்ள 100 முக்கிய வழிபாட்டு தலங்களில் மக்கள் வந்து செல்ல ஏதுவாக பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. மெரினா, அடையாறு உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் மணலில் செல்லக்கூடிய வாகனங்களில் ரோந்து மேற்கொள்ளப்படும். மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் நோக்கில் ஸ்பீக்கர்களுடன் கூடிய ரோந்து வாகனங்கள் ஈடுபடுத்தப்படும். குடித்து விட்டு வாகனம் ஓட்டுபவர்களின் ஓட்டுனர் உரிமம் உடனடியாக ரத்து செய்யப்பட்டு, அரசு பதிவேடுகளில் பதியப்படும் எனவும் காவல் துறை எச்சரித்துள்ளது.
Discussion about this post