பிரபல தமிழ் எழுத்தாளர் பிரபஞ்சன் உடல்நலக் குறைவால் இன்று காலமானார். ஓராண்டுக்கு முன்பு புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சைப் பெற்று வந்த அவர் சிகிச்சை பலனினறி உயிரிழந்தார். தமிழுக்கு பெருமை சேர்த்த தற்கால படைப்பாளிகளில் பிரபஞ்சன் மிக முக்கியமானவர்.
1945-ம் ஆண்டு ஏப்ரல் 27-ம் தேதி புதுச்சேரியில் பிறந்த அவரது இயற்பெயர் சாரங்கபாணி வைத்தியலிங்கம். அங்கு பள்ளிப்படிப்பையும், தஞ்சை கரந்தை கல்லூரியில் தமிழ் வித்வான் பட்டமும் பெற்றார். ஆசிரியராக வாழ்க்கையைத் துவக்கிய அவர் குமுதம், ஆனந்த விகடன் போன்ற வாரஇதழ்களிலும் பணிபுரிந்தார்.
என்ன உலகமடா என்ற அவரது முதல் சிறுகதை 1961-ம் ஆண்டு பரணி என்ற சிற்றிதழில் வெளிவந்தது. வானம் வசப்படும், மகாநதி, மானுடம் வெல்லும், சந்தியா, காகித மனிதர்கள் போன்ற பெருநாவல்களையும் நேற்று மனிதர்கள், விட்டு விடுதலையாகி, இருட்டு வாசல் உள்ளிட்ட சிறுகதை தொகுதிகளையும், முட்டை – அகல்யா போன்ற நாடகங்களையும் மயிலிறகு குட்டி போட்டது, அப்பாவின் வேஷ்டி போன்ற கட்டுரை தொகுதிகளையும் எழுதி உள்ளார்.
இவரது படைப்புகள் ஆங்கிலம், ஜெர்மன், பிரெஞ்சு, ஸ்வீடிஷ், இந்தி, தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு உள்ளன. 1995ஆம் ஆண்டில் ‘வானம் வசப்படும்’ புதினத்திற்காக சாகித்ய அகாடமி விருது இவருக்கு வழங்கப்பட்டது.
தமிழக அரசு மற்றும் புதுவை அரசின் சிறந்த எழுத்தாளருக்கான விருதுகளையும் பிரபஞ்சன் பெற்றவர். கடந்த ஓராண்டுக்கு முன்பு புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உடல்நலம் தேறிய நிலையில் கடந்த மாதம் 15-ந் தேதி மீண்டும் உடல்நலம் குன்றினார். ஒருமாதத்திற்கும் மேலாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சைப் பலனின்றி இன்று உயிரிழந்தார்.
Discussion about this post