கடந்த 2001ல் நாடாளுமன்றத்தில் அத்துமீறி நுழைந்த ஜெய்ஷ் இ முகமது மற்றும் லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்புகளை சேர்ந்த 5 தீவிரவாதிகள் தாக்குதலில் ஈடுபட்டனர்.
2001-ம் ஆண்டு டிசம்பர் 13 குளிர்காலக் கூட்டத் தொடர் நடந்துகொண்டிருந்த சமயம். 100-க்கும் மேற்பட்ட அரசியல் பெரியதலைகள் பாரளுமன்றத்தில் ஒன்றாகக் குழுமியிருந்தனர். அப்போது மத்திய அரசின் (உள்துறை அமைச்சகம் மற்றும் )போலி அடையாளப்பதாகைகள் ஒட்டப்பட்ட வண்டியில் வாயிற்காவலர்களை ஏமாற்றி விட்டு உள்ளே வந்தனர் ஜெய்ஷ் இ முகமது மற்றும் லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்புகளை சேர்ந்த 5 தீவிரவாதிகள். சரியாக, துணைக் குடியரசுத் தலைவர் கிருஷன் காந்த் வெளிவந்த நேரம் எதிர்பாராத விதமாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். பதில் தாக்குதல் நடத்தினர் பாராளுமன்ற வளாக காவலர்களும் பாதுகாப்புக் காவலர்களும். மொத்தம் 40 நிமிடங்கள் நீடித்த இந்த தாக்குதலில் 6 டெல்லி போலீசார், காவல் பாதுகாப்புப் பணியாளர்கள் மற்றும் தோட்ட ஊழியர் உள்ளிட்ட 14 பேர் உயிரிழந்தனர்.
உயிரிழந்தவர்கள் 14 மேலும் காயமடைந்தோர் எண்ணிக்கை 22. இதில் கவனம் பெற வேண்டியவர் ஒரு பெண் போலிஸ் ஆவார். மத்திய சிறப்புப் பாதுகாப்புப் படை (சிஆர்பிஎஃப்) காண்ஸ்டபிள் கமலேஷ் குமாரி யாதவ் . இவர்தான் இந்த தாக்குதலின் போது முதன்முதலில் தீவிரவாதிகளை அடையாளம் கண்டவர். அந்த இடத்திலேயே தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட இவர் சாகும் நொடிக்குமுன் அபாய மணியை ஒலித்துவிட்டு இறந்துபோய் அனைவரையும் காப்பாற்றினார். இவரது வீரதீரச் செயலை பாராட்டி குடியரசு இந்தியாவின் மிக உயரிய விருதுகளில் ஒன்றான அஷோக் சக்ரா விருது 2002 ஜன,26 ல் பிரதமர் வாஜ்பாயீ அவர்களால் வழங்கப்பட்டது.
தீவிரவாதிகள்
1. ஹம்ஸா,
2. ஹைதர் (எ) துஃபைல்,
3. ராணா,
4. ராஜா மற்றும்
5. முகமது என்று தில்லி காவல்துறை தெரிவித்தது.மேலும் பாகிஸ்தானைச் சேர்ந்த மௌலானா மசூத் அஸார், காஸி பாபா (எ) அபு ஜெஹாதி மற்றும் தாரிக் அகமது என்னும் மூவரையும் இத்தாக்குதலுக்குத் திட்டம் வகுத்ததாக இந்திய நீதி மன்றம் அறிவித்தது
தாக்குதல் நடத்தியோரிடமிருந்த ஏகே 47,கிரெனேட் ஏவுகனைகள், கைத்துப்பாக்கிகள், கிரெனேடுகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. அதே ஆண்டு நவம்பர் மாதம் காஷ்மீர் சட்டசபையிலும் இதேபோல் ஒரு தாக்குதல் நடைபெற்றது என்பதும் அதில் 38 பேர் இறந்ததும் கவனத்தில் கொள்ளவேண்டியது.
17 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த இந்த சம்பவத்தின் நினைவு தினம் ஒவ்வொரு ஆண்டும் டிச,13 அன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது.சம்பவத்தின் போது பாஜக மூத்த தலைவர் அத்வானி பாராளுமன்றக் கட்டிடத்தினுள் இருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
2001 டிச,13 அன்று பராளுமன்ற வளாக பாராளுமன்ற கட்டிடத்தின் 11-ம் வாயிற்கதவுக்கு அடுத்தபடியாக அமைந்துள்ள இரும்புவாயில் 1ன் அருகில் பணியமர்த்தப்பட்டிருந்தார் கமலேஷ் குமாரி யாதவ். டிஎல் 3சி ஜே 1527 என்ற உரிம எண்பலகை கொண்ட அம்மாஸிடர் கார் ஒன்று நுழைவதைக் கண்டார். காரை நெருங்கியபோது ஏதோ முறைமையின்மையைக் கண்ட கமலேஷ் குமாரி, வேகமாகத் தனிடத்திற்குத் திரும்பி வாயிலை சீல் செய்ய முயன்றபோது தீவிரவாதிகள் சுடத்தொடங்கினர். கிட்டத்தட்ட 11 குண்டுகள் வயிற்றில் பாய்ந்த நிலையில் இறக்கும் தருவாயில் அபாய மணியை ஒலித்துவிட்டு இறந்தார். சரியாக 11.50 க்கு சம்பவம் நிகழ்ந்ததாக பதிவுசெய்யப்படுள்ளது. இவர் முதலாம் வாயிலிலேயே ஒலித்த மணியால்தான் அடுத்தடுத்த அடுக்குப் பாதுகாவலர்கள் இவர்களைத் தடுக்க ஆயத்தமாகவும் மனித வெடிகுண்டுகளை செயலிழக்கச் செய்யவும் முடிந்தது.
டெல்லி விகாஸ்புரியில் தன் கணவர் மற்றும் இரு மகள்களுடன் வாழ்ந்துவந்த கமலேஷ் குமாரியின் குடும்பம் தற்போது உத்திரப்பிரதேசத்தில் வசித்துவருகின்றனர்.
இந்த சதிக்குக் காரணமான முகமது அப்சல் க்கு மரணதண்டனை விதித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால் அப்சலின் குடும்பம் பின்னாளின் குடியரசுத்தலைவர் ஏ.பி.ஜே அப்துல்கலாம் அவர்களிடம் கருணை மனு வழங்க டெல்லியில் நம்பிக்கையோடு காத்திருந்தது. இந்தநிலையில் அப்சலின் கருணைமனு ஏற்கப்பட்டால் அசோக சக்ரா விருதை திரும்ப அளிப்பதாக கமலேஷ் குமாரியின் குடும்பம் தெரிவித்தது. இதனால் மனுவை ஏற்கவும் இல்லாமல் நிராகரிக்கவும் இல்லாமல் காலம் தாழ்த்தி வந்தார் அப்போதைய குடியரசுத் தலைவர் அப்துல்கலாம். இதனால் அதிருப்தியடைந்த கமலேஷ் குமாரி உள்ளிட்ட சம்பவத்தில் இறந்த 8 பாதுகாப்புக்காவலர்களின் குடும்பங்கள் டிச,13 2006 அன்று விருதுகளைத் திருப்பி அளித்தன.
2012 ல் பிரனாப் முகர்ஜி குடியரசுத்தலைவராக 2012 ஜுன் மாதம் 22-ம் நாள் பதவியேற்றார். 2013ன் தொடக்கத்தில் அந்தக் கருணைமனுவை நிராகரித்த பிறகு 2013 பிப்,9 ம் தேதி அப்சல் திஹார் ஜெயிலில் தூக்கிலிடப்பட்டான்.இதனையடுத்து மார்ச்,30 2013 அன்று திருப்பி கொடுக்கப்பட்ட விருதுகள் உரியவர்களிடம் மீண்டும் சேர்ப்பிக்கப்பட்டன.
Discussion about this post