கஜா புயல் சேதங்களை பார்வையிட்ட மத்திய குழுவினரின் இடைக்கால அறிக்கையை 2 நாட்களில் தாக்கல் செய்ய வேண்டும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
கஜா புயலை பேரிடராக அறிவிக்கக் கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் இரண்டு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இந்த வழக்குகளில் பதில் மனுத்தாக்கல் செய்த தமிழக அரசு, கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் அளிக்கப்பட்டு வருவதாகவும் மின் இணைப்புகளை பொருத்தவரை நகரங்களில் 94 சதவீதமும் கிராமப்புற பகுதிகளில் 67 சதவீதமும் சரி செய்யப்பட்டு விட்டது என்றும் கூறியது. இந்த அறிக்கையை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், இடைக்கால உத்தரவை இன்று பிறப்பித்தது.
அதில் கஜா புயல் சேதம் தொடர்பாக ஆய்வு செய்ய அமைக்கப்பட்டுள்ள மத்திய குழு, 2 நாட்களில் தனது இடைக்கால அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இந்த அறிக்கை மீது ஒரு வாரத்திற்குள் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.
மின்சாரத்தை சீரமைக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய கூறிய உயர் நீதிமன்றம், வழக்கினை டிசம்பர் 6-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.
Discussion about this post