தமிழகம் வழியாக கரையை கடக்கும் புயல் காரணமாக ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், தலைமைச் செயலாளர் தலைமையில் அவசர ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெறவுள்ளது.
வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியுள்ளது. தமிழகத்தில் இருந்து 900 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்ட புயலுக்கு, மதம் கொண்ட யானை என்பதை குறிக்கும் வகையில் கஜா என்று பெயரிடப்பட்டுள்ளது.
ஆக்ரோஷமாக நகர்ந்து வரும் புயல் காரணமாக 15-ம் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், கடலூர்- ஸ்ரீஹரிகோட்டா இடையே புயல் கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, மறு உத்தரவு வரும் வரை மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
தானே, வர்தா, ஒக்கி என பல்வேறு புயல்களை கண்டுள்ள தமிழகம், கஜா புயலையும் எதிர்கொள்ள தயாராக உள்ளது. இதற்கான பணிகளை தமிழக அரசு முடுக்கி விட்டுள்ளது. 32 மாவட்டகளிலும் மீட்புப்படையினர் தயார் நிலையில் இருப்பதாகவும், புயல்மழை குறித்து அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறியுள்ளார்.
இதனிடையே, இதுகுறித்து தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் தலைமையில் உயர் அதிகாரிகள் பங்கேற்கும் அவசர ஆலோசனைக் கூட்டம் சென்னையில் இன்று நடைபெறுகிறது.
Discussion about this post