தமிழகத்தில் நீர்நிலைகளைத் தூர்வாரிச் சீரமைக்கும் குடிமராமத்துப் பணிகள் சென்னை, கோவை, திருச்சி, மதுரை என 4 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு நடைபெற்று வருகின்றன.
சென்னை மண்டலத்தில் திருவள்ளூரில் 30, காஞ்சிபுரத்தில் 38, திருவண்ணாமலையில் 37, விழுப்புரத்தில் 73, கடலூரில் 36 மற்றும் வேலூரில் 5 என 6 மாவட்டங்களில் மொத்தம் 277 பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்தக் குடிமராமத்து பணிகளுக்காகச் சென்னை மண்டலத்திற்கு 91 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதேபோல் திருச்சி மண்டலத்தில் தஞ்சாவூரில் 117, நாகையில் 82, திருவாரூரில் 95, திருச்சியில் 88, கரூரில் 26, அரியலூரில் 12, புதுக்கோட்டையில் 66, நாமக்கல்லில் 19, சேலத்தில் 20, பெரம்பலூரில் 14, ஈரோட்டில் 4 என 11 மாவட்டங்களில் 229 கோடி ரூபாய் செலவில் 543 பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
கோவை மண்டலத்தைப் பொறுத்தவரை கோவையில் 45, திண்டுக்கல்லில் 80, ஈரோட்டில் 61, கரூரில் 7 மற்றும் திருப்பூரில் 135 என 5 மாவட்டங்களில் 328 பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதற்காக 109 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
மதுரை மண்டலத்தில் நெல்லையில் 185 பணிகளும், மதுரையில் 135 மற்றும் சிவகங்கையில் 110 பணிகளும், ராமநாதபுரத்தில் 69 பணிகளும் மேற்கொள்ளப்படுகின்றன. இதேபோல் விருதுநகரில் 65,
தூத்துக்குடியில் 37, தேனியில் 30, திண்டுக்கல்லில் 34, கன்னியாகுமரியில் 16 என மதுரை மண்டலத்தில் 9 மாவட்டங்களில் 681 பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதற்காக மதுரை மண்டலத்திற்கு 66 கோடி ரூபாயைத் தமிழக அரசு ஒதுக்கியுள்ளது.
இவ்வாறாக 4 மண்டலங்களிலும் 496 கோடி ரூபாய் மதிப்பில் மொத்தம் ஆயிரத்து 817 பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. வடகிழக்கு பருவ மழை தொடங்கவுள்ள நிலையில் குடிமராமத்து பணிகளால் ஏரி குளங்களில் நீரைத் தேக்குவதுடன், சேமித்த நீரை வறட்சிக் காலங்களில் பயன்படுத்த முடியும்.