சத்தீஸ்கரில் இரும்பு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 9 பேர் பலியாகியுள்ளனர்.
துர்க் மாவட்டம் பிலாய் நகரில் மாநில அரசுக்கு சொந்தமான இரும்பு ஆலை செயல்பட்டு வருகிறது.நவீனமயமாக்கப்பட்ட மற்றும் விரிவுபடுத்தப்பட்ட இந்த ஆலையை கடந்த ஜூன் மாதம் பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
இந்த நிலையில் பிலாய் இரும்பு ஆலையில் உற்பத்தி பணியில் ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாராத வகையில் ஆலையில் உள்ள கியாஸ் குழாயில் பயங்கர வெடிப்பு ஏற்பட்டது.இதனால் ஆலைக்குள் தீ பரவி கொழுந்துவிட்டு எரிந்தது.
அங்கு பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்கள் அலறியடித்துக்கொண்டு வெளியேறினர்.தீயில் சிக்கி 9 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்பு குழுவினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.படுகாயம் அடைந்த 14 பேருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.