ஒகேனக்கலில் வெள்ளப்பெருக்கு காரணமாக குளிக்க விதிக்கப்பட்ட தடையானது, 86 நாட்களுக்கு பிறகு நீக்கப்பட்டுள்ளது
கடந்த சில மாதங்களுக்கு முன்பு காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால் காவிரியில் அதிக நீர்வரத்து இருந்தது. ஜூலை மாதத்திலிருந்து செப்டம்பர் 5-ம் தேதிவரை , ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வினாடிக்கு 30 ஆயிரம் கனஅடியாக இருந்த உபரி நீரானது படிப்படியாக உயர்ந்து அதிகபட்சமாக வினாடிக்கு, 2 லட்சத்து 25 ஆயிரம் கனஅடி வரை வந்தது. இதனால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதை தொடர்ந்து ஒகேனக்கலில் உள்ள அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது.
இந்த நிலையில் மழை குறைந்ததால் சின்னாற்றில் மட்டும் பரிசல் இயக்க அனுமதி வழங்கப்பட்டது. ஐந்தருவியில் சேதமான தடுப்புகள் சீரமைக்கப்பட்டு வந்தது. இந்த பணிகள் முடிவடைந்ததால் 86 நாட்களுக்கு பின்பு ஐந்தருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. தற்போது ஆற்றில் வினாடிக்கு 16 ஆயிரம் கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது.