கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பாலக்கரை பகுதியில் கலக்கத்துடன் நின்ற அந்த 13 வயது சிறுமி அங்கிருந்தவர்களிடம் செல்போன் வாங்கி தனது தாயாருக்கு போன் செய்துள்ளார். தன்னை அடையாளம் தெரியாத இளைஞர் ஒருவர் காட்டுப்பகுதியில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக சிறுமி கூறியதைக் கேட்டு பதறியடித்தபடி பாலக்கரைக்கு வந்த அந்த தாயார், சிறுமியை அழைத்து சென்று விருத்தாசலம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் மகளுக்கு நேர்ந்த கொடூரம் குறித்து புகார் தெரிவிக்க, விவரத்தை கேட்டுள்ளனர்.
விருத்தாசலம் பகுதியை சேர்ந்த தந்தையை இழந்த அந்த சிறுமி, வேப்பூர் அருகே பெரியநெசலூர் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் விடுதியில் தங்கியிருந்து 7ஆம் வகுப்பு படித்து வருகிறார். செவ்வாய்க்கிழமை தந்தைக்கு திதி கொடுத்துவிட்டு, பள்ளி செல்வதற்காக பேருந்தில் சென்றவர் வேப்பூர் கூட்ரோடு பகுதியில் இறங்கியுள்ளார். வேப்பூர் வந்த தகவலை தாயாரிடம் தெரிவிப்பதற்காக அங்கு நின்ற இளைஞர் ஒருவரிடம் செல்போனில் பேசச் சொல்லியுள்ளார். அந்த இளைஞரும் செல்போனில் டயல் செய்தவர், சிறுமியின் தாயார் போனை எடுக்கவில்லை என்று கூறியுள்ளார். இதனால் தாயாருக்கு என்னவோ ஏதோ என்று எண்ணிய சிறுமி பள்ளி செல்லாமல், மறுபடியும் விருத்தாசலம் செல்ல பேருந்துக்கு காத்திருந்துள்ளார். அப்போது அந்த இளைஞர், தான் விருத்தாசலம் செல்வதாகவும் உடன் அழைத்து செல்வதாகவும் கூறியுள்ளார். பள்ளி சிறுமியும் அதை நம்பி பைக்கில் ஏறியுள்ளார். வேப்பூர் அருகே நகர் கிராமத்தில் உள்ள காட்டுப்பகுதிக்கு சிறுமியை ஏமாற்றி அழைத்து சென்ற இளைஞர் அங்கு வைத்து சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்ததோடு, அதனை வீடியோவும் எடுத்தாக கூறப்படுகிறது.
இதன்பின்னர் சிறுமியை விருத்தாசலம் பாலக்கரையில் இறக்கிச் சென்றுள்ளார். நடந்த சம்பவங்களை தாயார் சொன்னதோடு, அந்த இளைஞர் தன்னிடம் பேசவில்லை என்றும் மிஸ்டு கால் மட்டும் கொடுத்திருப்பதாகவும் போலீசாரிடம் தெரிவித்துள்ளார். அந்த இளைஞர் திட்டமிட்டு நடந்திருப்பதை யூகித்த மகளிர் போலீசார், சம்பவம் நடந்த வேப்பூர் போலீசாருக்கு தகவல் அளித்ததோடு, மிஸ்டு கால் கொடுத்த செல் நம்பரையும் தந்துள்ளனர்.இதனைத் தொடர்ந்து செல்நம்பரை வைத்து தேடிய போலீசார், சிறுமிக்கு உதவுவதுபோல் நடித்து ஏமாற்றி, பாலியல் வன்கொடுமை செய்த சேத்தியாதோப்பு அருகே உள்ள முடிகண்டநல்லூர் கிராமத்தை சேர்ந்த ஜீவா என்பவரை கைது செய்தனர். விசாரணையில் அவர் இதுபோல் சிறுமிகள் பலரையும் ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்திருப்பது தெரியவந்ததை அடுத்து, ஜீவா மீது போக்சோ உள்பட பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.