77வது சுதந்திரதினத்தை முன்னிட்டு தமிழகத்தில் நடைபெற்ற சிறப்பு கிராம சபை கூட்டங்களில் திமுக ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு எதிராகவும், விடியா அரசுக்கு எதிராகவும் பொதுமக்கள் ஆவேசம் காட்டியுள்ளனர். ஒருபானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல ஒரு சில நிகழ்வுகள் குறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம்…
கிருஷ்ணகிரி..!
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த சென்னசந்திரம் ஊராட்சிக்குட்பட்ட உளியாளம், மாரசந்திரம்,சென்னசந்திரம்,கெம்பசந்திரம், காலஸ்திபுரம் உள்பட 6 கிராமங்களைச் சேர்ந்த மக்கள், தங்களுக்கு நிலப்பட்டா வழங்காததை கண்டித்து, கிராமசபை கூட்டத்தை புறக்கணித்துள்ளனர். அதிகாரிகள் சமாதானம் செய்து அழைத்தபோதும், பட்டா வழங்கும் வரை எத்தனை ஆண்டுகளானாலும் கூட்டத்தை புறக்கணிப்பதாக திட்டவட்டமாக அவர்கள் மறுத்துவிட்டனர்.
தருமபுரி..!
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டி அடுத்த கோட்டமேடு இந்திரா நகரில் நடைபெற்ற சிறப்பு கிராம சபை கூட்டத்தில் அ.பள்ளிப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் தனசேகரன் பொறுபேற்று 4 ஆண்டுகளுக்கு மேலாகியும், அ.பள்ளிப்பட்டி, கல்லாத்துக்காடு, சாலூர் உள்பட 9 கிராமங்களுக்கு குடிநீர் வசதி செய்து தரவில்லை எனக் கூறி பொதுமக்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
கடலூர்..!
கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே மாளிகைமேடு ஊராட்சியில் கிராம சபை கூட்டத்தில், 100 நாள் வேலைத்திட்டம் தொடர்பாக பேசிக் கொண்டிருந்த சந்திரா என்னும் பெண் மீது கல் எரியப்பட்டதால் தலையில் பலத்த காயம் அடைந்துள்ளார். பண்ருட்டி போலீசார் இது தொடர்பாக விசாரித்து வருகிறனர்.
விழுப்புரம்..!
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே ஈச்சேரி ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்தில், பொதுமக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண அதிகாரிகளும் விடியா அரசும் ஒத்துழைக்கவில்லை என்று திமுகவைச் சேர்ந்த ஊராட்சி தலைவர் சேகர் குற்றம் சாட்டியதோடு, தனது தலைவர் பதவியையும், கட்சி பதவியையும் ராஜினாமா செய்யப் போவதாகவும் கூறியது விடிய ஆட்சியின் அவலத்தை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.
தமிழகத்தில் நடந்த கிராம சபை கூட்டங்களில் இன்று மக்கள் காட்டிய ஆவேசமும் அதிருப்தியும் ஆளும் திமுகவுக்கு நாடாளுமன்ற தேர்தலில் பாடம் புகட்டுவதை ஆரூடம் சொல்லியிருக்கிறது.