தமிழகத்தில் நேற்று நடைபெற்ற இரண்டாம் கட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில், 77.73 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாக தமிழ்நாடு தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
தமிழகத்தில் 27 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெற்று முடிந்தது. முதல்கட்டமாக 156 ஊராட்சி ஒன்றியங்களுக்கு கடந்த 27ந் தேதி அன்று தேர்தல் நடைபெற்றது. இதில் 76.19 சதவீத வாக்குகள் பதிவானது. இரண்டாம் கட்டமாக நேற்று நடைபெற்ற வாக்குப்பதிவு, காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடந்தது. முதல்கட்டத்தை போலவே, இரண்டாம் கட்ட தேர்தலிலும் வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர். சில இடங்களில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினரின் வன்முறைகளை தாண்டி, பெரும்பாலான இடங்களில் அமைதியாகவே நடந்து முடிந்தது.
வாக்குப்பதிவு நிறைவடைந்த பின்னர், வாக்கு பெட்டிகள் அனைத்தும் வாக்குச்சாவடி அலுவலர்கள் மற்றும் வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது. சீல் வைக்கப்பட்ட வாக்கு பெட்டிகள் பலத்த பாதுகாப்புடன் வாகனங்களில் ஏற்றி, வாக்கு எண்ணும் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
இதனிடையே, நேற்று, 77.73 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாக தமிழ்நாடு தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
மேலும், மறுவாக்குபதிவு நடைபெற்ற வாக்குசாவடிகளில் 72.70 சதவீத வாக்குகள் பதிவாகியிருப்பதாகவும் அந்த ஆணையம் தெரிவித்துள்ளது.
Discussion about this post