சென்னையில் நடைபெற்ற 70 ஆண்டுகள் பழமையான கார்கள் கண்காட்சி

சென்னையில் நடைபெற்ற 70 ஆண்டுகள் பழமையான கார்கள் கண்காட்சியில் இடம் பெற்றிருந்த கார்கள், காண்போரை கவர்ந்தது.

இன்றைய நவீன உலகில், எத்தனையோ விதமான கார்கள் வந்துவிட்டாலும், பழைய கார்களுக்கென்று தனி மவுசு உண்டு. அந்த வகையில், கான்போரை கவரும் விதமாக, சென்னை திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா கன்வென்சன் சென்டரில் பழமையான மற்றும் புராதனமான கார் மற்றும் இருசக்கர வாகன கண்காட்சி நடைபெற்றது.

இதில் 140க்கும் மேற்பட்ட கார்களும், 50க்கும் மேற்பட்ட இருசக்கர வானங்களும் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளது. 1920 முதல் 1970 வரையில் பயன்பாட்டில் இருந்த ரோல்ஸ் ராய்ஸ், ஜாக்குவார், எம்.ஜி. டார்ஜ், செவ்ரலெட், பென்ஸ், பி.எம்.டபில்யு, ஃபோர்டு, ஆஸ்டன் மார்டின் போன்ற உலகப் புகழ்பெற்ற கார் நிறுவனங்களின் கார்கள், சிறப்பான முறையில் பராமரிக்கப்பட்டு பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. 

இந்த கண்காட்சியில், சென்னையைச் சேர்ந்த கார் பிரியர் ஒருவர், தனது 37 கார்களையும் காட்சிப்படுத்தியிருந்தார்.

மறைந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆர் பயன்படுத்திய 1957 மாடல் டாட்ஜ் கிங்ஸ்வே கார், ஏ.வி.எம் ஸ்டுடியோஸ் நிறுவனர் ஏ. வி. மெய்யப்பசெட்டியார் பயன்படுத்திய 1938 மாடல் வாக்ஸால் கார், ஜெமினி ஸ்டூடியோஸ் அதிபர் வாசன் பயன்படுத்திய வாக்ஸால் வெலாக்ஸ் என்ற 1956ம் ஆண்டு மாடல் கார் போன்றவை மக்களிடம் அதிக கவனத்தை ஈர்த்தது.

மேலும், 70ஆண்டுகளுக்கு முன்பு பயன்படுத்தப்பட்ட அவசர ஊர்தி வாகனம், ஆங்கிலேயர் காலத்தில் பபயன்படுத்தப்பட்ட பேருந்து, ஆங்கிலேயர்கள் பயன்படுத்திய சொகுசு கார்கள், மக்களை வெகுவாக கவர்ந்ததாக கூறுகின்றனர் கண்காட்சியினை காண வந்த ரசிகர்கள்…

தற்பொழுது ஒவ்வொரு கார் நிறுவனமும், போட்டி போட்டுக்கொண்டு அதிவேக கார்களை தயாரித்து வரும் நிலையில், பழமையான கார்கள் மிகுந்த அழகுடன் இருக்கும் அதே நேரத்தில், வேகம் குறைந்த கார்கள் பயன்படுத்துவதால் விபத்துகள் குறையும் என்ற விழிப்புணர்வும் இந்த கண்காட்சி மூலம் ஏற்படுகிறது. தமிழகம் மட்டுமல்லாமல் வெளி மாநிலத்திலிருந்தும் கண்காட்சிக்கு கார்கள் கொண்டுவரப்பட்டது. குறிப்பாக கர்நாடக வின்டேஜ் மற்றும் கிளாசிக் கார் கிளப்பின் சார்பில் 6 கார்களும் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது.

சினிமாக்களில் பாடல் காட்சிகளில் மட்டுமே பார்க்கப்படும் இந்த பழமையான கார்களை, இது போன்று நேரில் பார்ப்பது அரிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது. மேலும், இது போன்ற கண்காட்சிகள் அதிகம் நடைபெற வேண்டும் என்று பொதுமக்களும், கார் பிரியர்களும் எதிர்பார்க்கின்றனர்.

 

Exit mobile version