தமிழகம் முழுவதும் அனுமதியின்றி செயல்பட்டு வந்த 684 குடிநீர் உற்பத்தி ஆலைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
சட்டவிரோதமாக நிலத்தடி நீரை உறிஞ்சும் நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து, அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் வினீத் கோத்தாரி மற்றும் சுரேஷ்குமார் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், அனுமதியின்றி செயல்படும் குடிநீர் ஆலைகளை மூடியது குறித்து அறிக்கை தாக்கல் செய்தார். குடிநீர் ஆலைகள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள், ஆலைகள் தற்காலிகமாக செயல்பட அனுமதிக்கவேண்டுமென கேட்டுக்கொண்டனர்.
குடிநீர் உற்பத்தியாளர்கள் போராட்டம் மூலமாக நீதிமன்றத்திற்கு நெருக்கடி கொடுக்கலாம் என நினைத்தால் அது தவறு என நீதிபதிகள் எச்சரித்தனர். மேலும், இயற்கை வளமான தண்ணீரை பயன்படுத்தும் நிறுவனங்களுக்கு ஏன் அவர்கள் உபயோகத்திற்கு ஏற்ப கட்டணம் நிர்ணயிக்ககூடாது என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், ஆலைகள் செயல்பட தற்காலிக அனுமதி கோரும் கோரிக்கை உள்ளிட்ட மற்றவற்றை கருத்தில் கொண்டு புதன் கிழமை உத்தரவு பிறப்பிப்பதாக தெரிவித்துள்ளனர்.
Discussion about this post