தெற்கு ரயில்வேயில் டெக்னீசியன் பணியில் நியமிக்கப்பட்ட 2,550 பேரில் 1,686 பேர் இந்தி மொழியில் தேர்வு எழுதியவர்கள் என்ற தகவல் மக்களவையில் இன்று அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டது.
நடப்பு மக்களவைக் கூட்டத் தொடரில் நடைபெற்ற விவாதத்தின் போது, 2018 ல் தெற்கு ரயில்வேயில் பணி நியமனம் பெற்றவர்கள் தொடர்பான விவரங்களை மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் கோரியிருந்தார்.
அதற்கு பதிலளித்த ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல், தெற்கு ரயில்வேயில் டெக்னீசியன் பதவிக்கான தேர்வில், பணி நியமனம் பெற்ற 2550 பேரில் இந்தியில் எழுதி தேர்வு பெற்றவர்கள் 1,686 பேர் என்றும், தமிழில் எழுதியவர்கள் 139 பேர் என்றும், மலையாளத்தில் எழுதியவர்கள் 221 பேர் என்றும், ஆங்கிலம் உள்பட்ட மற்ற மொழிகளில் எழுதியவர்கள் 504 பேர் என்றும் தெரிவித்தார்.
மேலும், இளநிலைப் பொறியாளர் பணி நியமனம் பெற்ற 1,180 பேரில் இந்தியில் தேர்வு எழுதியவர்கள் 160 பேர் என்றும், மலையாளத்தில் எழுதியவர்கள் 315 பேர் என்றும், தமிழில் தேர்வு எழுதியவர்கள் 268 பேர் என்றும், ஆங்கிலம் உள்பட்ட மற்ற மொழிகளில் தேர்வு எழுதியவர்கள் 437 பேர் என்றும் தெரிவித்தார்.
அதோடு, உதவி ரயில்ஓட்டுநர் பணிக்கு நியமனம் பெற்ற 908 பேரில் இந்தியில் தேர்வு எழுதியவர்கள் 90 பேர் என்றும், மலையாளத்தில் எழுதியவர்கள் 176 பேர் என்றும், தமிழில் எழுதியவர்கள் 333 பேர் என்றும், ஆங்கிலம் உள்பட்ட மற்ற மொழிகளில் தேர்வு எழுதியவர்கள் 309 பேர் என்றும் அமைச்சரின் பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணி நியமனம் பெற்றவர்கள் எந்தெந்த மாநிலங்களில் முகவரிகளைக் கொண்டவர்கள் என்ற கேள்விக்கு அமைச்சர் பதில் அளிக்கவில்லை.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சு.வெங்கடேசன் “ரயில்வே பணி நியமனங்களில் அந்தந்த மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் மிகக் குறைவாக தேர்வு பெறுவது தொடர்ந்து நடக்கிறது. இது மக்களுக்கான சேவையையும் பாதிக்கும். சேவை சார்ந்த நிறுவனங்களில் மக்களோடு உரையாடவும், சக தொழிலாளர்களோடு பரிமாறிக் கொள்வதற்கும் மாநில மொழி அறிவு மிக முக்கியம். டெக்னீசியன் பணிக்கு இந்தி பேசக் கூடிய 66% பேர் தேர்வு பெற்றிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.” என்று கூறியுள்ளார்.
Discussion about this post