சென்னையில், பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை மேலும் உறுதிப்படுத்தும் வகையில், நிர்பயா திட்டத்தின் கீழ், 3 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட இடங்களில், சுமார் 6 ஆயிரத்து 500 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படுகின்றன.
நவீன யுகத்தில், குற்றச் சம்பவங்களை கண்டுபிடிப்பதில், சிசிடிவி கேமரா மூன்றாவது கண்ணாகத் திகழ்கிறது. கண்களில் மண்ணைத்தூவி தப்பிச் செல்லும் குற்றவாளிகள், சிசிடிவி எனும் மூன்றாவது கண்ணிலிருந்து தப்பமுடியாது. சென்னையில் நகரம் முழுவதிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு, தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றன. குற்ற நடவடிக்கையில் ஈடுபட்டு தப்பிச் செல்பவர்கள், சிசிடிவி கேமராக்கள் உதவியுடன் கண்டுபிடிக்கப்பட்டு, 24 மணி நேரத்தில் கைது செய்யப்பட்டு தண்டிகப்படுகிறார்கள். இதேபோன்று பாலியல் குற்றங்களை கண்காணிக்கவும், சிசிடிவி கேமராக்கள் மிக முக்கியப் பங்காற்றுகிறது.
பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்புக்கு, தமிழக காவல்துறை அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது. சென்னை மாநகரம் முழுவதும், அம்மா ரோந்து வாகனங்கள் மூலம் தீவிர கண்காணிப்பு, பெண்களுக்கான காவலன் செயலி போன்றவை பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துகின்றன.
இதன் ஒரு பகுதியாக, பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை மென்மேலும் உறுதிப்படுத்தும் வகையில், சென்னையில் சுமார் 3 ஆயிரத்து 500 இடங்கள் கண்டறியப்பட்டு, நிர்பயா திட்டத்தின் கீழ், 114 கோடி ரூபாய் செலவில், 6 ஆயிரத்து 500 கேமராக்களை பொருத்த, சென்னை மாநகர காவல்துறை திட்டமிட்டுள்ளது. இத்தகைய நடவடிக்கைகளால், சட்டம் ஒழுங்கை பராமரிப்பதில், இந்தியாவிலேயே தமிழகம் சிறந்த மாநிலமாகத் திகழ்கிறது.
மேலும் பாலியல் குற்றங்களால் பாதிக்கப்படுவோரின் இல்லத்திற்கே சென்று, அவர்களுக்கு மன ரீதியாகவும், சட்ட ரீதியாகவும், மகளிர் காவல்துறை சார்பில் ஆலோசனை வழங்கப்படுகிறது. இதற்காக, பெருநகர காவல்துறையில் உள்ள 35 அனைத்து மகளிர் காவல் நிலையங்களைச் சேர்ந்த பெண் காவலர்களுக்கு, பெண் அமைப்புகள் மூலம் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.
சென்னையின் பல்வேறு பகுதிகளில், நிர்பயா திட்டத்தின் கீழ் பொருத்தப்படும் சிசிடிவி கேமராக்கள், பெண்களின் பாதுகாப்பை மேலும் உறுதிப்படுத்தும் என பெண்கள் மற்றும் மாணவிகள் தெரிவிக்கின்றனர்.
நாட்டையே உலுக்கிய நிர்பயா பாலியல் வன்கொடுமை சம்பவம் போன்று, மீண்டும் அரங்கேறாமல் தடுக்க, மத்திய, மாநில அரசுகள் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதற்கு, நிர்பயா திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் இந்த திட்டம், ஒரு சான்றாக அமையும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.
Discussion about this post