ஜம்மு காஷ்மீரில் குடியரசுத் தலைவர் ஆட்சியை மேலும் 6 மாதங்கள் நீட்டிப்பதற்கான மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியது
ஜம்மு காஷ்மீரில் மெகபூபா முப்தி தலைமையில், மக்கள் ஜனநாயக கட்சி – பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது. பாரதிய ஜனதா ஆதரவை விலக்கிக்கொண்டதையடுத்து சட்டப்பேரவை கலைக்கப்பட்டது. முதல் 6 மாதங்களுக்கு ஆளுநர் ஆட்சியும் பின்னர் குடியரசுத் தலைவர் ஆட்சியும் அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில், குடியரசுத் தலைவர் ஆட்சியை மேலும் 6 மாதங்கள் நீட்டிக்க செய்யும் மசோதா மற்றும் காஷ்மீர் இடஒதுக்கீடு மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து, இரு மசோதாக்களையும் ராஜ்யசபாவில் உள்துறை அமைச்சர் அமித் ஷா தாக்கல் செய்தார். திரிணமுல் காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சி ஆகியவை இம்மசோதாவை ஆதரித்த நிலையில், ராஜ்யசபாவிலும் இம்மசோதாக்கள் நிறைவேறின. இதன் மூலம் ஜூலை 3ம் தேதி முதல் அடுத்த 6 மாதங்களுக்கு காஷ்மீரில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலில் இருக்கும்