மதுரையில் இருந்து கண்டெய்னர் லாரி மூலம் திருச்சிக்கு எடுத்து செல்லப்பட்ட கவரிங் நகைகளை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், மதுரை மாவட்டத்தில் ஆட்சியரும், தேர்தல் அதிகாரியுமான நடராஜன் உத்தரவின் பேரில் 50-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. இவர்கள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், மேலூர் சித்தம்பட்டி சுங்கச்சாவடி அருகே அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது, கண்டெய்னர் லாரியில் கொண்டு செல்லப்பட்ட 6 பெட்டிகளில் இருந்த நகைகளை பறிமுதல் செய்தனர்.
லாரி ஓட்டுநர் சரியான தகவல் அளிக்காததால் சந்தேகத்தின் பேரில் சீல் வைக்கப்பட்ட கண்டெய்னர் லாரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு கொண்டுவரப்பட்டது. இதனை தொடர்ந்து நடைபெற்ற சோதனையில் கவரிங் நகைகள் என கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கான உரிய ஆதாரங்கள் இல்லாததால் பறிமுதல் செய்தனர்.
இதே போல் மதுரையில் பல்வேறு இடங்களில் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் 4 லட்சத்து 49ஆயிரத்து 350 ரூபாய் பணமும் ,100 கை கடிகாரங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இதுவரை 41 லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.