ஆறு மாதங்களில் 10 செயற்கைக்கோள்கள் விண்ணில் ஏவப்படும் என்று, இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட், நேற்று இரவு 10 மணி 8 நிமிடங்களுக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. வர்த்தக ரீதியாக பிரிட்டனின் 2 செயற்கைக்கோள்களை ஏந்திச் சென்ற பிஎஸ்எல்வி, வெற்றிகரமாக அவற்றை விண்ணில் நிலை நிறுத்தியது.
இதனைத்தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த இஸ்ரோ தலைவர் சிவன், விண்ணில் ஏவப்பட்ட 2 செயற்கைக் கோள்களும் பூமியில் இருந்து 583 கிலோ மீட்டர் தொலைவில் சுற்று வட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டதாக தெரிவித்தார். 2 செயற்கைக்கோள்களும் நிலப்பரப்பு ஆய்வு, பேரிடர் கால கண்காணிப்பு, கடல் வழி போக்குவரத்தை கண்காணிக்கும் என்று அவர் கூறினார்.
செயற்கைக்கோளை விண்ணில் ஏவுவதற்கு மிகவும் எளிமையான ராக்கெட் பி.எஸ்.எல்.வி.என்று சிவன் குறிப்பிட்டார். வரும் காலங்களில் செலுத்த உள்ள செயற்கைக்கோள்கள் பிரதமரின் டிஜிட்டல் இந்தியா திட்டத்திற்கு உதவியாக இருக்கும் என்றும், ஜனவரி 3-ம் தேதி சந்திராயன்- 2 விண்ணில் செலுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார். பி.எஸ்.எல்.வி ராக்கெட்டின் வெற்றி எதிர்கால திட்டங்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் இருக்கும் என்று கூறிய சிவன், அடுத்த 6 மாதங்களில் 10 செயற்கைக்கோள்கள் விண்ணில் ஏவப்படும் எனவும் இஸ்ரோ தலைவர் சிவன் நம்பிக்கைத் தெரிவித்தார்.