பாரீஸில் 53-வது சர்வதேச விமானக் கண்காட்சி

பிரான்சின் தலைநகர் பாரீஸில் 53-வது சர்வதேச விமானக் கண்காட்சி நடைபெற்றுவருகிறது. உலகின் மிகப் பிரபலமான விமானக் கண்காட்சிகளில் ஒன்றான இதைக் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் பார்ப்போம்…

உலகெங்கும் உள்ள விமான உரிமையாளர்கள் மற்றும் விமானப் பயணங்களை நேசிப்போருக்கான பிரதான கண்காட்சியாக பிரான்ஸின் சர்வதேச விமானக் கண்காட்சி உள்ளது. 1909 ஆம் ஆண்டில் இருந்து, 100 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்றுவரும் இந்தக் கண்காட்சிக்கு உலகின் மிகப் பழமையான மற்றும் மிகப் பெரிய விமானக் கண்காட்சி என்ற புகழ் உண்டு.

இவ்வாண்டு பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 53-வது சர்வதேச விமானக் கண்காட்சி பிரான்சின் பாரீசில் நேற்று தொடங்கியது. இது வரும் 23 ஆம் தேதிவரை தொடர்ந்து 7 நாட்களுக்கு நடைபெற உள்ளது. இந்த நிகழ்வின் முதல் 4 நாட்களில் விமான வர்த்தகத்தில் தொடர்புடையவர்கள் மட்டுமே கண்காட்சியில் அனுமதிக்கப்படுவார்கள். அடுத்த 3 நாட்கள் கண்காட்சி பொதுமக்களுக்காகத் திறக்கப்படும்.

ஒரு லட்சத்து 31ஆயிரம் சதுர மீட்டர்கள் பரப்பளவில் பிரமாண்டமாக நடைபெறும் இந்தக் கண்காட்சியில், 48 நாடுகளைச் சேர்ந்த 2,381 விமானத் தயாரிப்பாளர்கள் பங்கேற்கின்றனர். 140 விமானங்கள் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டு உள்ளன. 45 விமானங்கள் பார்வையாளர்களுக்காக விண்ணில் பறந்து கண்களுக்கு விருந்து வைக்க ஆயத்தமாக உள்ளன. கண்காட்சியில் உள்ள விமானங்கள் பறப்பதற்காக ஒரு லட்சத்து 92 ஆயிரம் சதுர மீட்டர்கள் வான் பரப்பு பிரான்ஸ் அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. கண்காட்சியின் போது ஒவ்வொரு பிற்பகலிலும் விமானங்கள் பறக்கும் நிகழ்வு இடம்பெறும்.

கடந்த 2017ல் நடைபெற்ற பாரீஸ் விமானக் கண்காட்சியை 1,42,000 வணிகர்கள் மற்றும் 1,80,000 பார்வையாளர்கள் கண்டுகளித்தனர். இந்தாண்டு இன்னும் அதிக பார்வையாளர்கள் எதிர்பார்க்கப்படுகின்றனர். இப்போது இந்தக் கண்காட்சியைப் பார்வையிட 98 நாடுகளைச் சேர்ந்த 290 பார்வையாளர்கள் அரசின் அழைப்பாளர்களாக வந்துள்ளனர். இங்கு செய்தி சேகரிக்க 67 நாடுகளைச் சேர்ந்த 3,450 பத்திரிகையாளர்களும் குவிந்து உள்ளனர்.

சர்வதேசத் தரம், நவீன தொழில்நுட்பம் இரண்டும் கொண்ட விமானங்களை ஒரே இடத்தில் கண்டுகளிக்க விரும்புபவர்களுக்கு பாரீஸின் 53-வது சர்வதேச விமானக் கண்காட்சி ஒரு தவிர்க்க முடியாத இடம். அத்தோடு இங்கு அதிக கவனம் ஈர்க்கும் விமானங்களுக்கு வணிக ஒப்பந்தங்கள் குவியும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version