பிரான்ஸில் டைனோசர்களின் எலும்பு கூடுகள் கண்டெடுப்பு

பிரான்சின் தென்மேற்கு பகுதியில் உள்ள விஞ்ஞானிகள் அகழ்வாராய்ச்சி செய்த பகுதி ஒன்றில் 140 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மிகப்பெரிய டைனோசர் எலும்பு ஒன்றை கண்டுபிடித்துள்ளனர்.

ஐஸ் ஏஜ், ஜூராசிக் பார்க், டைனோசர் ஐலேண்ட், டைனோசர்… இப்படி உலகில் என்றோ ஒருநாள் வாழ்ந்ததாகச் சொல்லப்படும் உயிரினங்களை வைத்து எடுக்கப்பட்ட கற்பனைப் படங்களைப் பார்த்திருக்கிறோம். அந்த டைனோசர் உள்ளிட்ட விலங்குகளின் எலும்புகளை அருங்காட்சியகங்களில் பார்த்திருப்போம். இப்படி வாழ்ந்திருக்கும் என்று எல்லாம் படித்திருப்போம்.

இந்தநிலையில், பிரான்ஸின் தென்மேற்கு பகுதியில் காங்நாக் என்ற நகரில் டைனோசரின் தொடை பகுதி எலும்பானது படிமமாக மண்ணில் புதைந்து கிடந்துள்ளது. சுமார் இரண்டு மீட்டர் இருக்கும் அந்த எலும்பு, தாவரங்களை உண்ணும் நீண்ட கழுத்துடைய டைனோசர் எலும்பாக இருக்கலாம் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

தாவரங்களை உண்ணும் டைனோசர்கள் அதிகம் காணப்பட்டன. அவை நிலத்தில் வாழும் மிருகங்களில் மிகப்பெரிய மிருகமாகவும் கருதப்பட்டது. படிம ஆராய்ச்சி நிபுணர்கள், இந்த எலும்புகளை பாதுகாத்து வைத்து ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.

“இது ஒரு மிகப்பெரிய கண்டுபிடிப்பு” என பாரிஸில் உள்ள தேசிய இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தை சேர்ந்த படிம ஆய்வாளர் ரோனன் அலைன் தெரிவித்துள்ளார். இம்மாதிரியான டைனோசர்கள் 140 மில்லியன் வருடங்களுக்கு முன் வாழ்ந்திருக்கலாம் என்று தெரிவித்த அலைன், இந்த டைனோசர்களின் எடை 40 டன்னிலிருந்து 50 டன் வரை இருக்கலாம் என தெரிவித்துள்ளார்.

இதேபோன்றதொரு தாவர வகை டைனோசரின் எலும்பு இதே இடத்தில் 2010 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. 2.2 மீட்டர் நீளம் இருந்த அந்த எலும்பின் எடை 500 கிலோ என்று கூறப்பட்டது. தற்போது எடுக்கப்பட்ட எலும்பு முழுமையாக மண்ணில் இருந்து பிரிக்கப்பட்ட பிறகு 500 கிலோ இருக்கும் என்று கூறப்படுகிறது. காங்நாக் பகுதியில் உள்ள திராட்சை தோட்டங்களில் புதைந்துள்ள அந்த தளத்தில் 70 விஞ்ஞானிகள் அகழ்வாராய்ச்சி பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

2010 ஆம் ஆண்டிலிருந்து சுமார் 40 வகை இனங்களின் 7,500க்கும் மேற்பட்ட படிமங்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இதனால் அந்த இடம் ஐரோப்பாவின் முக்கிய இடமாக கருதப்படுகிறது. டைனோசர் இனம் அழிந்து பல்லாயிரம் ஆண்டுகள் ஆனாலும் அதன் மர்மம் இன்றும் தொடர்கிறது…

Exit mobile version