இந்தியக் கிரிக்கெட் என்று எடுத்துக்கொண்டால் தற்போதைய காப்பான் என்று அனைவரும் நம்பக்கூடியவர் “கிங் கோலி” என்று ரசிகர்களால் அழைக்கப்படும் விராட் கோலிதான். தற்போது விராட் கோலி தன்னுடைய ஐநூறாவது சர்வதேசப் போட்டியில் ஆடி வருகிறார். அதில் சதமும் விளாசி வரலாற்று சாதனை செய்துள்ளார்.
இரண்டு டெஸ்ட் தொடர் கொண்ட போட்டியில் விளையாடுவதற்காக இந்திய அணி மேற்கிந்திய தீவுகளுக்கு பயணப்பட்டிருக்கிறது. இதில் முதல் போட்டியில் இந்திய அணி வென்று 1-0 என்ற கணக்கில் லீடில் உள்ளது. தற்போது இரண்டாவது டெஸ்ட் போட்டி போர் ஆப் ஸ்பெயினில் நடைபெற்று வருகிறது. இதில் கோலி சதம், ஜடேஜா மற்றும் அஸ்வின் அரை சதம் அடிக்க இந்திய அணி முதல் இன்னிங்க்சில் 438 ரன்கள் குவித்தது.
நேற்று நடந்த இரண்டாம் நாள் ஆட்டத்தில் களத்தில் இருந்த கோலி மற்றும் ஜடேஜா ஜோடி நிலைத்து நின்று ரன்களை குவிக்கத் தொடங்கியது. மேற்கிந்திய பவுலர் கேப்ரியல் வீசிய பந்தை பவுண்டரிக்கு விரட்டிய கோலி சதம் கடந்தார். இதன் மூலம் ஐநூறாவது சர்வதேச கிரிக்கெட் போட்டியில் சதம் விளாசிய முதல் வீரர் என்ற வரலாற்று சாதனையை கோலி தன்வசப்படுத்தியுள்ளார். ஐந்தாவது விக்கெட்டிற்கு கோலி-ஜடேஜா ஜோடி 159 ரன்கள் எடுத்தது. பின்னர் 121 ரன்கள் எடுத்திருந்த நிலையில் கோலி ரன் அவுட் ஆனார். கீமர் ரோச் வேகத்தில் ஜடேஜா 61 ரன்கள் எடுத்திருந்த நிலையில் பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். பின்னர் வந்த யாரும் பெரிதாக சோபிக்கவில்லை. அனைவரும் டெய்லண்டர் பேட்ஸ்மேன்கள்தான். ஆனால் அஸ்வின் மட்டும் நிலைத்து நின்று 58 ரன்கள் எடுத்தார். இன்னிங்ஸ் முடிவில் இந்திய அணி 438 ரன்கள் குவித்தது.
கோலி நேற்றைய ஆட்டத்தில் சதம் அடித்ததன் மூலம், சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தன்னுடைய 29 வது சதத்தை பூர்த்தி செய்தார். இதன் மூலம் டெஸ்ட்டில் அதிக சதம் அடித்த இந்திய வீரர்கள் வரிசையில் நான்காம் இடத்தில் உள்ளார். முதல் இடத்தில் 51 சதம் அடித்து சச்சினும், இரண்டாவது இடத்தில் 36 சதம் அடித்து டிராவிட்டும், மூன்றாவது இடத்தில் 34 சதம் அடித்து கவாஸ்கரும் உள்ளனர். உலக அரங்கில் டெஸ்ட் போட்டியில் அதிக சதம் விளாசியவர்களில் பட்டியலில் ஆஸ்திரேலிய ஜாம்பவான் டான் பிராட்மேனுடன் 16வது இடத்தை பகிர்ந்து கொள்கிறார் கோலி.
மூன்றுவித கிரிக்கெட் போட்டிகளிலும் சேர்த்து கோலி 76 சதங்கள் விளாசியுள்ளார். 111 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 29 சதங்களும், 274 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 46 சதங்களும், 115 டி20 போட்டிகளில் விளையாடி ஒரு சதமும் விளாசியுள்ளார் கோலி. டி20-யில் பெரும்பாலும் ஐபிஎல் கணக்கில் சேர்த்துக்கொள்ளப்பட மாட்டாது. அது வெறும் உள்ளூர் போட்டி என்ற விதத்தில் வரும். அந்தப் போட்டிகளில் கோலி ஐந்து சதம் விளாசியுள்ளது குறிப்பிடதக்கது. இதில் இன்னொரு சுவாரஸ்யமான தகவல் என்ன என்றால், கோலி மற்றும் சச்சின் தன்னுடைய 29வது சதத்தை மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராகத்தான் அடித்துள்ளார்கள்.