நான்கு வருடங்கள் ஓடிவிட்டது புல்வாமா தாக்குதல் சம்பவம் நிகழ்ந்து. இந்தியாவின் ஜம்மு காஷ்மீரில் உள்ள புல்வாமா மாவட்டத்தில் இந்த கொடூர சம்பவம் நிகழ்ந்தேறியது. 40 சி.ஆர்.பி.எஃப் வீரர்களும் ஒரு தாக்குதல் நடத்திய தீவிரவாதியும் பலியாகினர். 2019ஆம் ஆண்டு பிப்ரவரி 14ஆம் தேதி 78 பேருந்துகளில் 2547 சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் ஸ்ரீநகரிலிருந்து ஜம்மு தேசிய நெடுஞ்சாலை வழியாக ஜம்மு காஷ்மீர் சென்று கொண்டிருந்தனர். அப்போதுதான் அந்த துயர சம்பவம் நடந்தேறியது. இந்திய நேரப்படி சரியாக மதியம் மூன்றேகால் மணியளவில் லெத்திபோரா மற்றும் அவந்திபோரா பகுதிகளுக்கருகே மகேந்திரா ஸ்கார்பியோ வகை சிற்றுந்து ஒன்று படையினரின் பேருந்து ஒன்றில் மோதி வெடித்தது.
இந்த தாக்குதலில் 76வது பட்டாலியனைச் சேர்ந்த 40 வீரர்கள் மரணம் அடைந்தனர். இந்த தாக்குதலை ஏற்படுத்தியவன் பெயர் அகமது தார். அன்றக்கு வெறும் 20 வயது இளைஞன் தான். அவன் காஷ்மீரின் ககபோரா பகுதியை சேர்ந்தவன். அவன் ஓட்டி வந்த சிற்றுந்தில் 350 கிலோ எடைகொண்ட வெடிமருந்து இருந்துள்ளது. இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானின் ஆயுதக்குழுவான ஜெய்ஸ்-இ-முகமது பொறுப்பேற்றுக்கொண்டது. இறந்த நாற்பது வீரர்களில் தூத்துக்குடியைச் சேர்ந்த க. சுப்பிரமணியன் மற்றும் அரியலூரைச் சேர்ந்த சி. சிவசந்திரன் என்கிற இரண்டு தமிழக வீரர்களும் அடக்கம். இந்த தினத்தில் இறந்த வீரர்களின் தியாகத்தைப் போற்றுவோம்.