பூமியை சுற்றி வரும் சந்திரயான்-2 விண்கலத்தின் சுற்றுப்பாதை, நான்காவது முறையாக உயர்த்தப்பட்டுள்ளது.
நிலவை பற்றி ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-2 விண்கலம் ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் மூலம் கடந்த 22 ஆம் தேதி வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. புறப்பட்ட 16 நிமிடம் 24 வினாடிகளில் ராக்கெட்டானது, விண்கலத்தை குறிப்பிட்ட இலக்கில் கொண்டு போய் சேர்த்தது.
அப்போது ராக்கெட்டில் இருந்து பிரிந்த விண்கலம், திட்டமிட்டபடி பின்னர் பூமியை சுற்றி வந்தது. இதன்பின்னர் அடுத்தடுத்து 2 முறை சந்திரயானின் சுற்றுப்பாதை உயரம் அதிகரிக்கப்பட்டது. கடந்த 30-ம் தேதி 3-வது முறையாக சுற்று வட்டப்பாதை உயர்த்தப்பட்டது. இதையடுத்து 71 ஆயிரத்து 792 கிலோ மீட்டர் நீள் வட்டப்பாதையில் சந்திரயான்-2 செயற்கைகோள் பூமியை சுற்றியது.
இந்த நிலையில் பூமியின் நான்காம் சுற்றுவட்டப்பாதையில் சந்திரயான்-2 விண்கலம் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. இப்போது புவிக்கும் சந்திரயானுக்கும் இடையே உள்ள நீள்வட்ட சுற்றுபாதையின் குறைந்தபட்ச தூரம் 277 கிலோ மீட்டரும், அதிகபட்ச தூரம் 89 ஆயிரத்து 472 கிலோ மீட்டருமாக உள்ளது. வரும் 6-ம் தேதி, இதற்கு அடுத்த சுற்றுவட்டபாதையில் சந்திரயான்-2 நிலைநிறுத்தப்பட உள்ளது.