மதுரையில் கொரியர் ஊழியர்கள் போல் நடித்து, வீட்டில் இருந்தவர்களை கட்டிபோட்டு விட்டு, 46 லட்சம் ரொக்கம் மற்றும் 52 சவரன் நகைகளை கொள்ளையடித்து சென்றவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
மதுரை மேல அனுப்பானடி சண்முகாநகரில் வெற்றிவேல் என்பவர், குடும்பத்துடன் வசித்து வருகிறார். இன்று பிற்பகல் கொரியர் ஊழியர்கள் போல் இரண்டு பேர், தலையில் ஹெல்மெட் அணிந்தபடி வெற்றிவேல் வீட்டின் கதவை தட்டியுள்ளனர். வெற்றிவேலின் மனைவி கதவை திறந்த போது, அவரது தாக்கி மர்ம நபர்கள் உள்ளே புகுந்தனர்.
வீட்டில் இருந்த வெற்றிவேல், அவரது மனைவி மற்றும் மருமகள் என அனைவரையும் கட்டிப்போட்டுள்ளனர். பின்னர் மூன்று பேரும் அணிந்திருந்த 52 சவரன் நகைகள், பீரோவில் வைக்கப்பட்டிருந்த 46 லட்சம் ரூபாய் ரொக்கத்தையும் அவர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். தடயங்களை மறைக்க, வீட்டில் மிளகாய் பொடியை கொள்ளையர்கள் தூவி சென்றுள்ளனர். தகவல் அறிந்த போலீசார், கொள்ளை நடந்த இடத்தில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்து விசாரித்து வருகின்றனர்.
Discussion about this post