தனது 380ஆவது அகவையில் அடியெடுத்து வைத்துள்ளது சென்னை மாநகரம். சென்னையின் 380ஆண்டுக் கால வரலாற்றைப் பற்றி விவரிக்கிறது இந்தச் செய்தித் தொகுப்பு…
நம் அனைவராலும் சென்னை என ஒய்யாரமாக அழைக்கப்படும் இந்த நகரம் கடந்த காலங்களில் சென்னப்பநாயக்கன் பட்டினம் என உருவாகி சென்னமாப்பட்டினம் என மருவி, சென்னைப்பட்டினம் என தழுவி இன்று சென்னையாக வாழ்ந்து வருகிறது.
மேலும், மதராஸப்பட்டினம், மதராஸ் என அழைக்கப்பட்டு வந்த சென்னை 1996ஆம் ஆண்டில் தான் சென்னை எனப் பெயர் பெற்றது. 1639ஆம் ஆண்டு ஆகஸ்ட் 22ஆம் தேதி அன்று தான் சென்னை என்ற ‘மதராஸ்’ உருவானதாகச் சொல்லப்படுவதால், ஒவ்வொரு ஆண்டும் அதே நாளை சென்னை தினமாகக் கொண்டாடி வருகிறோம். 1639ஆகஸ்ட் 22ஆம் தேதி கிழக்கிந்திய கம்பெனியை சேர்ந்த ஃபிரான்சிஸ் டே, ஆண்ட்ரு கோகன் ஆகியோர் தங்களது உதவியாளர் பெரிய திம்மப்பா என்பவர் உதவியுடன் ஜார்ஜ் கோட்டை உள்ள இடத்தை விலைக்கு வாங்கினர்.
அந்த இடத்தினை விற்ற உரிமையாளர் சென்னப்ப நாயக்கன் என்பவரின் நினைவாகக் கோட்டைக்கு வடக்கே உள்ள ஊர் ‘சென்னப்ப நாயக்கன் பட்டினம்’ என்றும் அதற்கு தெற்கே உள்ள ஊர் ‘மதராசு’ என்று அழைக்கப்பட்டது. இந்த இரண்டு பட்டினங்களையும் ஒன்று சேர்த்த பிறகு ஆங்கிலேயர்கள் ‘மெட்ராஸ்’ என்றும் தமிழர்கள் ‘சென்னப்பட்டினம்’ என்றும் அழைத்து வந்தனர். அதனிபின்னர் தான் 1996ஆம் ஆண்டு சென்னை என பெயர் மாற்றப்பட்டது.
இப்படி பெயருக்கென்றே ஒரு நீண்ட வரலாறு கொண்ட இந்த நகரம் தமிழகத்தின் வெள்ளை மாளிகையான புனித ஜார்ஜ் கோட்டையையும், சென்னையின் மையமாகத் திகழும் சென்டரல் ரயில் நிலையம், உயர்நீதிமன்றம், ரிப்பன் மாளிகை, விக்டோரியா கட்டிடம் எனப் பல வரலாற்று சிறப்பு மிக்க கட்டிடங்களையும், ஆசியாவின் இரண்டாவது மிகப்பெரிய கடற்கரையும், ஜல்லிக்கட்டு புரட்சியால் உலகையே திரும்பி பார்க்க செய்த மெரினாவையும், ஆசியாவின் மிகப்பெரிய பேருந்து நிலையமான கோயம்பேடு பேருந்து நிலையத்தையும், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் போன்ற பல சிறப்புகளைத் தன்னுள் தாங்கி நிற்கிறது.
இப்படி பல்வேறு வரலாற்று சிறப்புகளை தாங்கி நிற்கும் சென்னையின் பாரம்பரியத்தை காக்கத் தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக சென்னையில் பழமையான கட்டிடங்களைப் பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
சென்னை பெருநகர வளர்ச்சிக்கான விதிமுறைகளை பின்பற்றி சென்னை பெருநகரில் உள்ள பழமையான கட்டிடங்களின் கலைநயத்தை ஆவணப்படுத்தி அரசின் ஒப்புதலுக்காகவும், அரசிதழில் வெளியிடவும் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. இதுவரை 164 புரதான கட்டிடங்களுக்கான ஆவண அறிக்கை அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
வந்தாரை வாழ வைக்கும் சென்னையின் பாரம்பரியத்தையும் பழமையையும் பாதுகாக்க நாமும் அரசுடன் சேர்ந்து முயற்சிப்பதன் மூலம் சென்னை இன்னும் பல நூற்றாண்டுகள் பொலிவுடன் மிளிரும் என்பதில் ஐயமில்லை.