கர்நாடக அரசை கவிழ்க்க பாஜக ,30 கோடி ரூபாய் பேரம் பேசியதாக காங்கிரஸ் எம்.எல்.ஏ குற்றம் சாட்டியுள்ளார்.
கர்நாடகாவில் காங்கிரஸ்- மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. மதசார் பற்ற ஜனதா தளம் கட்சி தலைவர் குமாரசாமி முதலமைச்சராக உள்ளார்.இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு அமைச்சர் பதவி கேட்டு 22 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி தூக்கியதால் கர்நாடக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டது.
பாஜக, மாநில தலைவர் எடியூரப்பா, காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை இழுக்க முயற்சி செய்வதாக குமாரசாமி குற்றம் சாட்டினார்.
இந்த நிலையில் கர்நாடக மாநில காங்கிரஸ் மகளிர் அணி தலைவியும், எம்.எல்.ஏ.வுமான லட்சுமி ஹெப்பான்சர் , தன்னிடம் பாஜகவினர் 30 கோடி தருவதாக பேரம் பேசியதாக கூறியுள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர்,சில நாட்களுக்கு முன்பு பாஜக மூத்த தலைவர் ஒருவர் என்னிடம் போனில் பேசி, காங்கிரஸ் மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி அரசை கவிழ்க்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டதாக தெரிவித்தார். நான் காங்கிரசில் இருந்து விலகி பாஜகவில் சேர்ந்தால் 30 கோடி ரூபாய் பணமும், அமைச்சர் பதவியும் தருவதாக அவர் தெரிவித்ததாகவும் அதற்கு தான் மறுத்து விட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
பாஜக தலைவர் பேசிய போன் அழைப்பை பதிவு செய்து காங்கிரஸ் மேலிடத்துக்கு அனுப்பியுள்ளதாக கூறிய அவர்,
பாஜகவின் ஆசை வார்த்தைகளுக்கு மயங்கி காங்கிரசை விட்டு விலக மாட்டேன் என்றும் லட்சுமி ஹெப்பான்சர் தெரிவித்துள்ளார்.