அத்திவரதர் வைபவத்தை ஒட்டி, காஞ்சிபுரத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு 3 நாட்கள் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
அத்திவரதர் தரிசனம் லட்சக்கணக்கான பக்தர்கள் நாள்தோறும் காஞ்சிபுரம் நோக்கி படையெடுத்து வருகின்றனர். இந்த நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், தலைமைச் செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், அமைச்சர்கள் மற்றும் அரசு உயரதிகாரிகள் பங்கேற்றனர். அப்போது, அத்திவரதர் வைபத்திற்காக இதுவரை மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும், இனி வரும் காலங்களில் செய்ய வேண்டிய பாதுகாப்பு குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், பக்தர்கள் அதிக அளவில் வருவதை கருத்தில் கொண்டும் இடையூறுகளை தவிர்க்கும் வகையிலும், காஞ்சிபுரம் நகரத்திற்கு 13, 14, 16 ஆகிய நாட்களில் உள்ளூர் விடுமுறை விடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதிக வாகனங்கள் வருவதால், கூடுதல் வாகனங்களை பள்ளி, கல்லூரி வளாகங்களில் நிறுத்தவும், பக்தர்கள் ஓய்வெடுக்க வசதியும் ஏற்படுத்தப்பட வேண்டும், வயதானவர்கள், மாற்று திறனாளிகள் அமர்ந்து செல்ல ஏற்பாடு மற்றும் பக்தர்களுக்கு வழங்கப்படும் உணவு, குடிநீரின் சுகாதாரத்தை கண்காணிக்க வேண்டும், பாதுகாப்பு பணிகளில் ஈடுபடும் ஊழியர்களுக்கு சிறப்பு ஊக்கத் தொகை வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதனிடையே, தமிழக அரசின் மூன்று நாள் விடுமுறையையும் சேர்த்து காஞ்சிபுரத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு தொடர்ந்து 9 நாட்கள் விடுமுறை கிடைத்துள்ளது. 10 மற்றும் 11ஆம் தேதி வார முறையை தொடர்ந்து 12 பக்ரீத் பண்டிகை விடுமுறையாகும். 15ஆம் தேதி சுதந்திர தினம் 17 மற்றும் 18 வார முறையையும் சேர்த்து மொத்தம் 9 நாட்கள் விடுமுறை கிடைத்துள்ளது. இதனால் அத்திவரதரை தரிசிக்க உள்ளூர் மக்களும் அதிக அளவில் வருவார்கள் என்பதால் பக்தர்கள் கூட்டம் அலைமோதும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Discussion about this post