கொரோனா தொற்றால் உயிரிழந்த நோயாளிகளின் மருந்து சீட்டு, ஆதார் அட்டை ஆகியவற்றை பயன்படுத்தி ரெம்டெசிவிர் மருந்தை வாங்க முயன்ற 3 பேரை சென்னை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தமிழ்நாட்டில் ரெம்டெசிவிர் மருந்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்ட நிலையில், தட்டுப்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து, இதைப் பயன்படுத்தி சமூக விரோத கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர்.
இதனைத் தடுக்கும் முயற்சியில், சென்னை போலீசார் மற்றும் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்பிரிவு போலீசார் ரகசிய விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ரெம்டெசிவர் மருந்தை வாங்குவதற்காக அடுத்தடுதது வரிசையில் நின்று கொண்டு இருந்த மூன்று பேரின் விவரங்களை, மருந்து கவுண்டரில் உள்ள மருந்து வழங்கும் அதிகாரிகள் சோதனை செய்தபோது, நோயாளிகளின் விவரங்கள் அனைத்துமே ஒரே மாதிரியாக செல்வம் என்ற பெயரில் இருந்தது தெரியவந்தது.
மேலும், தஞ்சாவூரைச் சேர்ந்த தனியார் மருத்துவமனையின் மருத்துவரின் மருந்து சீட்டும் இருந்ததால் மருந்து வழங்கும் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.
உடனடியாக சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவமனையில் மருத்துவரை தொடர்பு கொண்டு அதிகாரிகள் விசாரித்துள்ளனர்.
அப்போது செல்வம் என்ற நோயாளி கடந்த 7 ஆம் தேதியே கொரோனாவால் மரணமடைந்த தகவலை சம்பந்தப்பட்ட மருத்துவர் கூறியுள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த கீழ்பாக்கம் மருந்துவ அதிகாரிகள் உடனடியாக கீழ்ப்பாக்கம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
விசாரணையில் அவர்கள் சென்னை மாதவரத்தை சேர்ந்த சதீஷ், செல்வகுமார் மற்றும் அயனாவரத்தை சேர்ந்த கிறிஸ்டிபால் என்பது தெரியவந்தது.
மூன்று பேரையும் கைது செய்த போலீஸார், கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இறந்த நோயாளியின் ஆதார் அட்டை மற்றும் அவருக்கு ரெம்டெசிவர் மருந்து வழங்குவதற்காக கொடுக்கப்பட்ட மருந்துச் சீட்டு உள்ளிட்ட ஆவணங்கள் எப்படி கிடைத்தது? பின்னணியில் இருப்பவர்கள் யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ரெம்டெசிவர் மருந்தை கள்ளச் சந்தையில் அதிக விலைக்கு விற்க முயன்ற தனியார் மருத்துவர்கள், அரசு மருத்துவமனை ஊழியர்கள் என 17 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
ரெம்டெசிவிருக்கு தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், அதனை கள்ளச்சந்தையில் விற்று அதிக லாபம் ஈட்டும் கும்பலை அடியோடு ஒழிக்க வேண்டும் என்பது பொதுமக்களின் வலியுறுத்தலாக உள்ளது.
Discussion about this post