ஐக்கிய நாடுகள் சபைக்கு தன்னுடைய 3 மாத கைக்குழந்தையை அழைத்து வந்ததன் மூலம் புதிய வரலாறு படைத்துள்ளார் நியூசிலாந்து பிரதமர் ஜெசிண்டா ஆர்டெர்ன்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் 73-வது பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் நெல்சன்மண்டேலா அமைதிக் கூட்டத்தில் உலக நாடுகளின் தலைவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
நியூசிலாந்து நாட்டின் பிரதமராக உள்ள ஜெசிண்டா ஆர்டெர்னா, கணவர் க்ளார்க் கேபோர்ட் உடன் அதில் பங்கேற்றார். சமீபத்தில் ஆண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்த ஜெசிண்டா தமது 3 மாத கைக்குழந்தையுடன் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொண்டார்.
ஐக்கிய நாடுகள் சபையின் வரலாற்றில் கைக்குழந்தையுடன் கலந்து கொண்ட முதல் பிரதமர் என்ற பெருமையை இதன்மூலம் பெற்றார் ஜெசிண்டா.
அதேபோன்று பதவியில் இருக்கும் போது குழந்தை பெற்றுக்கொண்ட 2-வது பெண் பிரதமர் என்ற பெருமை ஏற்கனவே ஜெசிண்டாவுக்கு உண்டு.
இதற்கு முன்னர் 1990-ம் ஆண்டு பாகிஸ்தானின் பெனாசிர் பூட்டோ, பதவியில் இருக்கும் போது குழந்தை பெற்றுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.
நியூசிலாந்து பிரதமர் ஜெசிண்டா ஆர்டெர்ன் குழந்தையுடன் ஐ.நா.சபையில் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.