60களில் அதிகம் பேர் பயந்த உயிர்க்கொல்லி நோய்களில் ஒன்று பெரியம்மை. ஏறக்குறைய மூன்றாம் நூற்றாண்டிலிருந்தே பெரியம்மை நோய் இருந்ததற்கான சான்றுகள் இருந்தபோதும் எப்போது தொடங்கியது என்பது குறித்த ஆதாரப்பூர்வமான தரவுகள் நம்மிடையே இல்லை.
சரி. அது தெரிந்து என்ன செய்யப்போகிறோம்.எப்படி நதிமூலம் ரிஷிமூலம் பார்க்கக்கூடாதோ அதேபோல பிணிமூலமும் பார்க்கக்கூடாது.
எகிப்திலிருந்து தொடங்கி எட்வர்டு ஜென்னரில் முடிவடையும் இந்த பெரியம்மை நோயின் கதையில் கிளைமாக்ஸ் முடிந்து சுபம் போட்ட தினம் இன்று.பெரியம்மை நோய் வேருடன் அழிக்கப்பட்டதாக, 1980 ம் ஆண்டு இதே மே 8ம் தேதிதான் உலக சுகாதார் சட்டசபையில், அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதாவது 29 ஆண்டுகளுக்கு முன்பு பெரியம்மைக்கு நாம் பெரிய கும்பிடு போட்டு அனுப்பி வைத்த நாள் இது.
சரி எப்படி ஒழித்தார்கள் ?
கி.பி 3ம் நூற்றாண்டிலிருந்து இருக்கிறது. கொடிய நோயாக, தொற்றும் நோயாக, உயிர்க்கொல்லி நோயாக இருக்கிறது. மருந்தில்லாமல் மக்கள் கஷ்டப்பட்டார்கள். ஒன்றல்ல இரண்டல்ல சுமார் 18 நூற்றண்டுகளாக உலகத்தை பாடய்ப்படுத்தியது பெரியம்மை.
கி.பி 1765 இல் ஜான் ஃபியூஸ்டெர் என்ற மருத்துவர் பெரியம்மை நோய்க்கு கௌபாக்சு நோயினால் பெரியம்மை நோயைத் தடுக்க முடியும் என்ற தனது கட்டுரையை லண்டன் மருத்துவக் கழகத்திற்கு அனுப்பினார். ஆனால் அதற்கான விளக்கத்தை அவரால் அளிக்க இயலவில்லை.
கி.பி 1796ம் ஆண்டு அறிவியல் அறிஞர் எட்வர்டு ஜென்னர் இதற்கான செயல்படக்கூடிய தடுப்பு மருந்தை கண்டுபிடித்தார். பின் 1798-ஆம் ஆண்டு அம்மை நோயின் காரணங்களும், விளைவுகளும் பற்றிய ஓர் ஆய்வு என்ற தலைப்பில் ஒரு நூலாக வெளியிட்டார். ஆனால் 200 ஆண்டுகளுக்குப் பிறகும் 1978 வரையிலும் பெரியம்மையால் உயிரிழப்பு ஏற்பட்டுக்கொண்டேதான் இருந்தது.18 ம் நூற்றாண்டிலேயே தடுப்பு ஊசிகள் இருந்த போதிலும், ஆப்பிரிக்கா, ஆசியா கண்டங்களில் இந்த நோய் பரவிக்கொண்டு தான் இருந்தது. 1959ம் ஆண்டில், உலக சுகாதார மையம், பெரியம்மையை முற்றிலுமாக நீக்க முடிவெடுத்தது. ஆனால் நிதி பற்றாகுறையினாலும், போதுமான தன்னார்வத் தொண்டர்கள் இல்லாததாலும், இதனை வெற்றிகரமாக செயலாக்க இயலவில்லை.
பின் 1967ம் ஆண்டில், மீண்டும் இந்த முயற்சி தீவிரப்படுத்தப்பட்டது. காரணம் 1967 ம் ஆண்டில் மட்டும் , 15 மில்லியன் மக்கள் பெரியம்மையால் மட்டுமே இறந்துபோயிருந்தார்கள் என்று உலகசுகாதார நிறுவனம் தன் கணக்கெடுப்பில் அறிந்திருந்தது.
கண்டவாரியாக பெரியம்மையின் கடைசி தாக்குதல்கள் என்று பார்க்கப்போனால்,
வட அமெரிக்கா கண்டம் – 1952
தென் அமெரிக்கா கண்டம் – ஏப்ரல் 19, 1971 (பிரேசில்)
ஐரோப்பிய கண்டம் – 1978
ஆப்ரிக்கா கண்டம் – அக்டோபர் 12, 1977 (சோமாலியா)
ஆசியா கண்டம் – அக்டோபர் 16, 1975 (வங்காளதேசம்)
ஆஸ்திரேலியா கண்டம் – நோய் இருந்ததற்கான தரவுகள் இல்லை.
யார் கடைசி?
என்னது? 1975 வரை ஆசியாவில் இருந்ததா? எங்கு இந்தியாவிலா? ஆம். ஏறக்குறைய இந்தியாவில் என்று சொல்லலாம்.
1975ம் ஆண்டில், வங்காளதேசத்தில், ‘ரஹிமா பானு’ என்னும் 3 வயது சிறுமிதான் பெரியம்மை நோயால் இயற்கை முறையில் பாதிக்கப்பட்டு குணமடைந்த கடைசி மனிதர்.
இதற்குப் பிறகு ஆசிய கண்டத்தில் பெரியம்மை இறப்புகள் இல்லை. 1978ம் ஆண்டில், ‘ஜேனட் பார்க்கர்’ என்னும் மருத்துவ புகைப்படம் எடுப்பவர், பெரியம்மை நோயின் ஆராய்ச்சியின் போது நோயுற்று, செப்டம்பர் 11 அன்று இறந்தார். அதுதான் கடைசி அதற்குப்பின் உலகில் பெரியம்மை தாக்குதல்கள் எங்கும் இல்லை. உலகை மிரட்டிய நோயை தடுப்பூசிகளால் உலகம் விரட்டிய தினம் இன்று.
தடுப்பூசிகளை அரசு வலியுறுத்துவதன் நோக்கம் இதுதான். தடுப்புசிகளை அலட்சியம் செய்யாமல் ஆரோக்கியமாக வாழுங்கள்..
Discussion about this post