சென்னை, காஞ்சிபுரம் உட்பட 26 மாவட்டங்களில் இன்று முதல் வெப்பநிலை இயல்பை விட 6 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக் கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
வடமேற்கு திசையிலிருந்து தரைக்காற்று தமிழ்நாடு நோக்கி வீசுவதே இதற்கு காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்று முதல் அடுத்த 4 நாட்களுக்கு சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் உள்ளிட்ட 26 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் வெப்ப நிலை இயல்பை விட 4 முதல் 6 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், 5-ம் தேதி கரூர், தர்மபுரி, சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் இயல்பை விட 5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகரிக்கக் கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஒருசில இடங்களில் அனல்காற்று வீசக்கூடும் என்பதால், பகல் 12 மணி முதல் 4 மணி வரை வெளியில் செல்வதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளது.