வாரிசு அமைச்சரான உதயநிதி ஸ்டாலின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராக பதவி ஏற்ற பிறகு துறையின் செயல்பாடுகள் பின்னடைவை நோக்கியே செல்வதாக கூறப்படுகிறது. அதே போல உதயநிதி ரசிகர் மன்ற தலைவரான அமைச்சர் அன்பில் மகேஷும் தனது பள்ளிக்கல்வித் துறையில் அக்கறை காட்டாமல் உதயநிதி படத்தை புரமோஷன் செய்வதிலேயே கண்ணும் கருத்துமாக இருப்பதாகச் சொல்லப்படுகிறது.
இப்படி தங்களது துறைகளின் மீது இருவரும் அக்கறை காட்டாதது, விளையாட்டுகளில் ஆர்வம் காட்டி வந்த தமிழக பள்ளி மாணவர்களை இந்த முறை தேசிய விளையாட்டு போட்டிகளில் பங்கெடுக்க முடியாமல் செய்துள்ளது.
கொரோனா காரணமாக கடந்த 3 ஆண்டுகளாக நடைபெறாத 19 வயதுக்கு உள்பட்ட பள்ளி மாணவர்கள் பங்கேற்கும் தேசிய அளவில் நடைபெறும் பள்ளிகளுக்கு இடையேயான விளையாட்டு போட்டிகள், இந்த ஆண்டு ஜூன் 5ல் தொடங்கி, 12ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தப் போட்டிகளில்தான் 247 தமிழகப் பள்ளி மாணவர்கள் கலந்து கொள்ள இயலவில்லை.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் மாவட்ட விளையாட்டு மற்றும் மேம்பாட்டு அலுவலராக இருக்கும் நாகரத்தினம் என்பவரிடமிருந்து
பள்ளிக்கல்வித்துறையின் கீழ் பணியாற்றும் முதன்மை உடற்கல்வி ஆய்வாளருக்கு விளையாட்டு போட்டிகள் தொடர்பாக கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், பள்ளி கல்வித்துறை அமைச்சருக்கும், உயர் அதிகாரிகளுக்கும் அந்தக் கடிதம் குறித்த தகவல் அனுப்பப்படவில்லை என்று சொல்லப்படுகிறது.
விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அதிகாரிகளும் அந்த கடிதம் உரியமுறையில் பள்ளிக்கல்வித்துறையில் தெரிவிக்கப்பட்டதா என்பதை கண்டறியத் தவறிவிட்டதாகவும் கூறப்படுகிறது. இப்படி அரசுத்துறைகளுக்குள் நிகழ்ந்த ஈகோ யுத்தம் மற்றும் தகவல் பரிமாற்ற அசட்டையின் காரணமாக தேசிய அளவிலான பள்ளிகளுக்கு இடையேயான விளையாட்டு போட்டிகளில் பங்கேற்பதற்காக காத்திருந்த 247 மாணவர்களின் விளையாட்டு எதிர்காலத்தை கேள்விக் குறியாக்கி உள்ளனர்.
இந்த விளையாட்டுகளில் பங்கெடுப்பது மற்றும் வெற்றி பெறுவதன் வழியாக மாணவர்களுக்கு மதிப்பெண்கள் அதிகரிக்கும். இந்த மதிப்பெண்களும், சான்றிதழ்களும் அவர்கள் விளையாட்டு கோட்டாவில் கல்லூரியில் சேருவதற்கும், அரசு வேலைகளில் சேர்வதற்கும் வாய்ப்பாக இருக்கும். ஆனால் விளையாட்டுத்துறை மற்றும் பள்ளிக்கல்வித்துறையின் அலட்சியத்தால் இரண்டுதுறை அமைச்சர்களும் அதனை கண்டு கொள்ளாததால் விளையாட்டு வீரர்கள் தேசிய அளவிலான போட்டியில் பங்கெடுக்காமல் போயுள்ளனர்.
கடந்த அதிமுக ஆட்சியில் 2018 – 19ஆம் ஆண்டு நடைபெற்ற தேசிய அளவிலான பள்ளிகளுக்கு இடையேயான விளையாட்டுப் போட்டியில்
தமிழக பள்ளி மாணவர்கள் பதக்கங்களை குவித்து அகில இந்திய அளவில் ஏழாவது இடத்தை பெற்றனர். ஆனால் விடியா ஆட்சியில் தமிழக விளையாட்டு மாணவர்களின் எதிர்கால ஆசையில் உலை வைத்துள்ளனர் இரண்டு அமைச்சர்களும்.
நியூஸ் ஜெ செய்திகளுக்காக செய்தியாளர் ராம்குமார் மற்றும் செஸா