2019 ஆண்டின் மறக்க முடியாத நிகழ்வுகள்..

ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டு பிறப்பு அன்று நண்பர்கள், உறவினர்கள் இணைந்து கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடுவார்கள்.மற்ற ஆண்டை விட 2020 ஆம் ஆண்டின் மீது அனைவருக்கும் மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது.அதே சமயத்தில் 2019 ஆண்டில் நடைபெற்ற சில நிகழ்வுகளை நம்மால் மறக்கவே முடியாது.

புல்வாமா தாக்குதல் :

காஷ்மீரில் புல்வாமா மாவட்டத்தில் பிப்ரவரி 14ம் தேதி துணை ராணுவ வீரர்கள் பயணம் செய்த வாகனங்களை குறிவைத்து பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பினர் வெடிகுண்டுகள் நிரப்பிய மோட்டார் சைக்கிளை மோதி வெடிக்க வைத்தனர். இதில் 40 துணை ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து தீவிரவாதிகள் முகாமை பிப்ரவரி 26ம் தேதி இந்திய விமானப்படை குண்டுவீசி தாக்குதல் நடத்தி அழித்தது.

இதற்கு பதிலடியாக மறுநாள் பாகிஸ்தான் விமானப்படை விமானங்கள், இந்திய ராணுவத்தின் மீது தாக்குதல் நடத்த முயன்றன. அப்போது இந்திய விமானப்படை கமாண்டர் அபிநந்தன் , பாகிஸ்தானின் எஃப்-16 போர் விமானத்தை சுட்டு வீழ்த்தினார்.எனினும் அந்த சண்டையில் இந்திய  விமான படைக்கு சொந்தமான மிக் 21 பைசன் விமானம் பாகிஸ்தான் எல்லையில் விழுந்ததால் அபிநந்தனை சிறைபிடித்தனர்.இவர் அங்கிருந்து மீண்டு வந்த சம்பவத்தை தொடர்ந்து அபிநந்தன் மறக்கமுடியாத ஒருவராக மாறிவிட்டார்.

மேலும் ,புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்தவர்களில் சிவச்சந்திரன், சுப்பிரமணியன் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இந்த செய்தி தமிழக ஊடங்களால் அதிக பேசப்பட்ட விஷயமாகும்.

மக்களவை தேர்தல் :

நாடு முழுவதும் நடைபெற்ற மக்களவை தேர்தல் மறக்க முடியாத ஒன்று.இந்த தேர்தலானது ஏப்ரல் மாதம் 11 ம் தேதி தொடங்கி மே 19 வரை 7 கட்டங்களாக நடைப்பெற்றது.இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை தங்களின் ஜனநாயக கடமையை ஆற்றி பிரதமர் மோடியை 2வது முறையாக பிரதமராக தேர்வு செய்தனர்.

அத்திவரதர் தரிசனம் :

40 ஆண்டுகளுக்கு ஒரு முறை குளத்திலிருந்து வெளி வரும்  அத்திவரதரை தரிசனம் செய்ய  2019 ஆம் ஆண்டு ஜூலை 1-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 17ம் தேதி வரை லட்சக்கணக்கான பக்தர்கள் காஞ்சிபுரம் சென்றனர்.

1979 ஆம் ஆண்டுக்கு பிறகு அனந்தசரஸ் குளத்திலிருந்து அத்திவரதர் அருள்பாளித்ததால் ஜூலை , ஆகஸ்ட் மாதங்களில் மட்டும்  3 கோடியே 59 லட்சம் சுற்றுலாப் பயணிகள் காஞ்சிபுரத்திற்கு வருகை தந்துள்ளனர் என மாநில சுற்றுலாத்துறை அறிவித்துள்ளது.அத்திவரதால் காஞ்சிபுரத்தின் புகழ் உலகெங்கும் பரவியது என்று சொன்னால் மிகையாகாது.

மோடி-ஜி ஜின்பிங் சந்திப்பு :

 

உலக தலைவர்களில் முக்கியமானவர் சீன அதிபர் ஜி ஜின்பிங்.இந்திய பிரதமர் மோடி-சீன அதிபர் ஜி ஜின்பிங் இணைந்து அக்டோபர் 11, 12ம் தேதி  மாமல்லபுரத்தில் பேச்சுவார்த்தை நடத்தியது உலக நாடுகளை தமிழகம் நோக்கி திரும்பி பார்க்க வைத்தது.உள்ளூர் பத்திரிகை முதல் உலக பத்திரிகை வரை  மோடி-ஜி ஜின்பிங் சந்திப்பு அதிகம் பேசப்பட்ட ஒன்றாகும்.மேலும் ,இந்த சந்திப்பில்  இருநாட்டு உறவை வலுப்படுத்துவது குறித்து மோடி-ஜி ஜின்பிங் பேச்சுவார்த்தை நடத்தினர்.

ஆழ்துளை கிணற்றில் விழுந்த  சுஜித் :


திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே, நடுக்காட்டுப்பட்டியில், ஆழ்துளை கிணற்றில் 2 வயது ஆண் குழந்தை சுஜித் 2019 ஆம் ஆண்டு அக்டோபர் 25ம் தேதி மாலை தவறி விழுந்தான். இதனையடுத்து குழந்தை சுஜித்தை பாதுகாப்பாக மீட்கும் பணி பல்வேறு கட்டங்களாக நடத்தப்பட்டது.எவ்வளவு முயற்சித்தும் குழந்தை சுஜித்தை உயிரோடு மீட்க முடியாததால் 2019 ஆம்  ஆண்டு தீபாவளி தமிழக மக்களுக்கு சோகத்தோடு அமைந்தது.

குடிமராமத்து திட்டம் :

 

நீரின்றி அமையாது உலகு’ என்று வள்ளுவன் கூறியிருப்பதை நாம் அறிவோம்.வாழ்வதற்கு முக்கிய ஆதாரமான தண்ணீரை தமிழக மக்களுக்கு எளிதில் கிடைக்கும் படி  குடிமராமத்து திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 2019 ஆம் ஆண்டு செயல்படுத்தினார்.

வாய்க்கால்கள், கால்வாய்கள், ஏரிகள், மதகுகள் மற்றும் பிற நீர்நிலைகளை சீரமைத்து பலப்படுத்துதல், கலிங்குகள் மற்றும் மதகுகளை மறுகட்டமைப்பு செய்தல், நீர்த் தடங்களில் அடைத்திருக்கும் செடிகளை அகற்றுதல் போன்ற பணிகள் குடிமராமத்துத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டன.

தமிழக அரசின் இந்தத் தொலைநோக்கு நடவடிக்கைகளால் மேட்டூர் அணையின் நீரும், தமிழகத்தின் மழை நீரும் மக்களுக்கு மிகவும் பயன்பட்டது.கல்வெட்டுகளின்படி கரிகாலச் சோழன் காலத்தில் தமிழகத்தில் காணப்பட்ட குடிமராமத்துத் திட்டத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீட்டெடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

உள்ளாட்சி தேர்தல் :


தமிழ்நாட்டில் ஏற்கனவே தேர்வுசெய்யப்பட்டிருந்த உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் 2016ல் முடிவடைந்தது. அதற்குப் பிறகு தேர்தல் அறிவிக்கப்பட்டபோது, முறையாக இட ஒதுக்கீடு செய்யப்படவில்லையென தி.மு.க. வழக்குத் தொடர்ந்தது.

இந்த நிலையில்  டிசம்பர் 2ஆம் தேதியன்று ஊரகப் பகுதிகளுக்கு உள்ளாட்சித் தேர்தல் நடக்குமென தமிழகத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்த அறிவிப்பை தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்தன.இப்படி எதிர்கட்சிகள் பல முறை எதிர்த்தாலும் தடைகளை தாண்டி உள்ளாட்சி தேர்தலை நடத்த அதிமுக அரசு பல முயற்சிகளை எடுத்தது.

இதனை தொடர்ந்து, பல இடையூறுகளுக்கு பிறகு 8 ஆண்டுகள் கழித்து 2019 ம் ஆண்டு டிசம்பர் 27 மற்றும் 30ம் தேதிகளில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது.

முதலமைச்சர், துணை முதலமைச்சர் வெளிநாட்டு பயணம்:


தமிழக முதலமைச்சரின் வெளிநாட்டு பயணம் உலக தலைவர்களை தமிழகம் நோக்கி திரும்பி பார்க்க வைத்தது.

முதலமைச்சரின் அமெரிக்க, துபாய் பயணத்தின்போது 8,835 கோடி ரூபாய் முதலீட்டுக்காக மொத்தம் 41 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையொப்பமிடப்பட்டுள்ளன. இதன் மூலம் மொத்தம் 35,520 பேருக்கு வேலைவாய்ப்புக் கிடைக்க உள்ளது.இதன் மூலம் தமிழகத்தில் பல முன்னணி தொழில் நிறுவனங்கள் தொழில் தொடங்க உள்ளன.

மேலும் அமெரிக்க சென்ற துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமெரிக்க – இந்திய SME கவுன்சில் நிர்வாகிகளை சந்தித்து, தமிழகத்திற்கு தொழில் முதலீடுகள் பெறுவது குறித்து ஆலோசனை நடத்தினார்.

நல்லாட்சியில் தமிழகம் முதலிடம் :

 

தேசிய நல்லாட்சி தினத்தை முன்னிட்டு இந்திய மாநிலங்களில் நல்லாட்சி நடைபெறும் மாநிலங்களின் பட்டியலை, மத்திய அரசின் பணியாளர் மற்றும் பயிற்சித் துறை 2019 ஆம் ஆண்டு வெளியிட்டது.

18 பெரிய மாநிலங்களும்,11 சிறிய மாநிலங்களும், 7 யூனியன் பிரதேசங்களும் இடம்பெற்ற இந்தப் பட்டியலில் தமிழகம் நல்லாட்சி நிர்வாகத்தில் 5.62 மதிப்பெண் புள்ளிகளைப் பெற்று தேசிய அளவில் முதலிடத்தைக் கைப்பற்றி உள்ளது. எந்த வருடமும் தமிழகத்திற்கு கிடைக்காத அங்கீகாரம் 2019 ஆம் ஆண்டு கிடைத்துள்ளது  என்பது குறிப்பிடத்தக்கது

2019 ஆம் ஆண்டில் தமிழகத்தில் பல மறக்கமுடியாத முக்கிய நிகழ்வுகள் நிகழ்ந்துள்ளது.2020 ஆம் ஆண்டு அனைவருக்கும் நன்மை தரும் ஆண்டாக அமைய  நியூஸ் ஜெ தொலைக்காட்சி சார்பாக புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

Exit mobile version